பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் , ” ‘சேது’ படம் வரும்போது எனக்கு 14 வயசு. அந்த க்ளைமேக்ஸ் பாதிப்பைக் கொடுத்தது. பாலா சார் படத்தை திரையரங்கத்துல பார்த்ததுலாம், இன்னைக்கு நெனச்சு பார்க்கிறேன். ‘அமரன்’ படத்தில் நெகடிவ் எண்டிங் உள்ளது, தீபாவளிக்கு நெகடிவ் எண்டிங் உடன் ரிலீஸ் ஆகும் படம் ஓடாது என்று சொன்னார்கள். அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அப்போதுதான் பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் தீபாவளிக்கு வந்து ஹிட்டானது எனக்கு மனவலிமையை அளித்தது. அவரை கொண்டாடுகிற விழாவில் நான் இருப்பது எனக்கு பெருமை.
‘அவன் இவன்’ படத்தோட நிகழ்வை நான்தான் தொகுத்து வழங்குனேன். அந்த நிகழ்வை ரொம்ப பயந்து பயந்து பண்ணினேன். பாலா சார் மாதிரி படம் எடுக்கணும்னு ஊர்ல இருந்து கிளம்பி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படியான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கார். அவருடைய திரைமொழி ரொம்ப தனித்துவமானது. அருண் விஜய் அண்ணன்தான் ‘நீ கண்டிப்பா வரணும் தம்பி’னு கூப்பிட்டார். அருண் விஜய் சார் எனக்கு ரொம்ப சீனியர். அவர் விட்டுக் கொடுக்காமல் முயற்சி பண்றதுதான் அவரோட உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன்.
தம்பியாக இந்தப் படத்துக்கு அவரை வாழ்த்துறேன். பொங்கலுக்கு அஜித் சாரோட விடாமுயற்சி படம் வருது, வணங்கான் படமும் வருது. ரெண்டு படத்தோட முதல் எழுத்தும் V-ல தொடங்குது. அதனால் ரெண்டுமே வெற்றியடையும் ” என்று பேசினார்.