மியன்மாரில் இருந்து 103 அகதிகளுடன் திசை மாறி வந்த படகொன்று இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
அப்படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும் அதில் 35 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் , கற்பிணித்தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியன்மார் அகதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர்களை திருகோணமலையில் இருந்து கடற் படைப் படகொன்று வருகைதந்து மீட்டுச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவசங்கத்தினருடன் இணைந்து மியன்மார் அகதிகளைப் பார்வையிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரும் கரையொதுங்கிய அகதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.