மியன்மார், உக்ரேன் போன்ற நாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்டு, நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு பொது மக்களின் உதவியை கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மியன்மார், யுக்ரைன் போன்ற நாடுகளில் பல இலங்கையர்கள் சிக்குண்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக வெளிவிவகா அமைச்சும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
குறித்த நாடுகளில் இலங்கையர்கள் சிக்குண்ட பின்னணியில் பாரிய வியாபாரமே காணப்படுகிறது. பலர் பாரியளவில் நிதிகளைக் கொடுத்துதான் அந்த நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். மக்கள் இனியும் இவ்வாறான செயற்பாடுகளை நம்பி ஏமாற்றமடையக் கூடாது என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.
அரசாங்கம் என்ற ரீதியில் குறித்த நாடுகளில் சிக்குண்டவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் நாம் செய்து வருகிறோம்.
பொது மக்களும், இது தொடர்பான தகவல்களை எமக்கு தந்துதவ வேண்டும்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.