இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 19 இலட்சத்து 1,988 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 21,174 ஆகும் என்றும் குறித்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமல்லாது ரஷ்யாவிலிருந்து 13,762 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,417 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 6,574 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,198 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5,598 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 2,922 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கசகஸ்தானின் அல்மாட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
கசகஸ்தானின் தேசிய விமான நிறுவனமான அல் அஸ்தானா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான KC167 இலக்கம் கொண்ட குறித்த விமானத்தில் 150 பயணிகளும் 8 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் வாரத்தின் முதல் 4 நாட்கள் கசகஸ்தான் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.