ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார்.
2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார்.
மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.