அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) திங்கட்கிழமை (23) பிற்பகல் வொஷிங்டன், டி.சி.யிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறிப்பிட்டுள்ள கிளின்டனின் துணைத் தலைவர் ஏஞ்சல் யுரேனா,
முன்னாள் ஜனாதிபதி நலமாக உள்ளார்.
அவர் எதிர்வரும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் – என்றார்.
78 வயதான கிளின்டன், மெட்ஸ்டார் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் வொஷிங்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்தார்.
அவர் குறைந்தபட்சம் ஒரே இரவில் வைத்தியசாலையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்மஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் வேகமாக பரவியது.
ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்பு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதிலிருந்து, 42 ஆவது அமெரிக்க ஜனாதிபதி, பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.
அவர் 2004 இல் நியூயோர்க்கில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்தார், அடுத்த ஆண்டு நுரையீரல் பாதிப்பனை எதிர்கொண்டார்.
2010 இல் அவருக்கு மற்றொரு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுநீரக நோய்த்தொற்று அவரது இரத்த ஓட்டத்தில் பரவியதால் 2021 இல் லொஸ் ஏஞ்சல்ஸில் ஆறு நாட்கள் வைத்தியசாலையிலும் கிளிண்டன் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.