இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கக் கோரி போராட்டம் நடத்தியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஊழியர்களை விடுவிக்கவும், அவர்கள் முன்னர் பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் பணியில் அமர்த்தவும், அபராதங்களில் இருந்து விடுவிக்கவும் CEB நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 8 மாத சம்பள நிலுவையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவு நீக்கப்பட்டு குறித்த ஊழியர்களுக்கு அமைச்சர் ஜெயக்கொடி நேற்று (24) மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான கடிதங்களை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
…
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டம் இருப்பதாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
அப்போது முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி கடமைகளை செய்யாதவர்களே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.