அசர்பைஜானில் இருந்து தெற்கு ரஷ்யாவிற்கு 67 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புதன்கிழமை (25) கசாக் நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், விபத்தில், இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது.
இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர்.
தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட தகவல்களின்படி, உயிர் பிழைத்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக கஜகஸ்தானின் போக்குவரத்து அமைச்சின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளில் 37 பேர் அசர்பைஜானைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கசகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.