2004 ஆம் ஆண்டு சுனாமி மற்றும் இலங்கையில் ஏற்பட்ட ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து தேசிய பாதுகாப்பு தினமான இன்று (டிசம்பர் 26) நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு, ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முக்கிய நிகழ்வு காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவு சிலைக்கு ( Peraliya Tsunami Memorial Statue ) முன்பாக நடைபெற உள்ளது.
எனவே, 2004 ஆம் ஆண்டு சுனாமி மற்றும் இலங்கையில் ஏற்பட்ட ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவருக்கும் நினைவாக இன்று நாடு முழுவதும் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் டிசம்பர் 26, 2004 ஞாயிற்றுக்கிழமை காலை 9.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த கடலுக்கடியில் மெகாத்ரஸ்ட் ( Megathrust ) பூகம்பம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அதிர்ச்சிக்கு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, பூகம்பத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருந்த இந்தோனேசியாவின் தலைநகரான பண்டா ஆச்சே ( Banda Aceh ) , 100 அடி உயர அலைகளால் பேரழிவிற்கு உட்பட்டது, 100,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலத்தீவுகள், மியான்மர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை கொந்தளிப்பான அலைகள் பின்னர் சூறையாடின.
2005 ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு, அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான தேசிய நிகழ்வாக, அரசியல் தலைமையின் பங்கேற்புடன், உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.