இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது.
இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை.அந்த அடிப்படையில் சுமந்திரன்தான் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சம்பந்தர் அவரைத்தான் தன்னுடைய வாரிசாக வளர்த்தார்.ஆனால் சுமந்திரன் ஜனநாயக வழிமுறைமூலம் தன் பலத்தைக் காட்ட விரும்பினார்.எனினும் அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டியது.அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அந்த தேர்தல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்பகையை வெளியே கொண்டு வந்தது. தமிழரசுக் கட்சி எந்தளவுக்குத் தூர்ந்து போய் உள்ளது என்பதனை அது வெளிப்படுத்தியது.
அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசிய அரசியல் எந்தளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது.
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டதை;டக்ளஸ்,பிள்ளையான்,அங்கஜன் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டதை;தமிழரசு கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை,வெற்றியாகக் காட்டமுடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் ஆசனங்கள் குறைந்துவிட்டன.அது ஒப்பீட்டளவில் தோல்வி. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக, பலமாக இல்லை.
இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளிப்படுத்தும் இரண்டு தேர்தல் நடந்திருக்கின்றன.இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியை பெறத் தேவையான பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதிருக்கிறார்கள் என்பதனை வெளியே கொண்டுவந்தன.
எனினும் இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ஒரு தேர்தல் வந்தது.அது ஜனாதிபதித் தேர்தல்.அதில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய 2,26,000.அது ஒரு அடிப்படை வெற்றி.கட்சிகளைக் கடந்து தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட போகிறோம் என்று கூறி ஒரு மக்கள் அமைப்பு அந்தத் தேர்தலைக் கையாண்டது.ஏழு கட்சிகளை வைத்து கட்சிகளைக் கடந்த ஒரு வாக்குத் திரட்டியை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்புத் திட்டமிட்டது. அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர்.
கட்சிகளைக கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின.இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தேர்தல் பரப்புரைக்காக பிரம்மாண்டமான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது,குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டுவரும் பேருந்துகளுக்கு சிறிய தொகைப் பணம் வழங்கப்பட்டது. எரிபொருட் செலவு,சாரதி மற்றும் வழிநடத்தினருக்கான சிற்றுண்டி,தேனீர் செலவுகள். இவ்வாறு வலிகாமம் பகுதியில் இருந்து மக்களைக் கொண்டு வந்த ஒரு பேருந்து உரிமையாளரிடம் செலவுப் பணத்தை கொடுத்த பொழுது, அவர் அதை வாங்க மறுத்து விட்டார்.”15 ஆண்டுகளாக கட்சிகளுக்குத்தான் ஆட்களை ஏற்றி இறக்குகிறேன். இதுதான் முதல் தடவை இப்படி ஒரு கூட்டத்துக்கு ஆட்களைக் கொண்டு வருவது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை இப்படி ஒன்றாக ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வருவது என்பது புதியது. 2009க்கு முந்திய நினைவுகளை அது மீட்டியது. எனக்கு நீங்கள் விருப்பம் என்றால் எரிபொருள் செலவு மட்டும் தாருங்கள்” என்று கேட்டார். கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்டும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு எழுச்சி ஏற்பட்டது என்பதனை காட்டும் ஒரு உதாரணம் அது.
அதுபோலவே ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை கிராமங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய மக்கள் சந்திப்புகளை நடத்தியது.இந்த சந்திப்புகளில் 75 விகிதமானவற்றில் ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் கூறப்பட்டது. என்னவென்றால், “கட்சிகளோடு வராதீர்கள், மக்கள் அமைப்பாக வாருங்கள், கட்சிகள் வேண்டாம்” என்பதே அது.
ஆனால் மக்கள் அமைப்பு தேர்தலை நேரடியாகக் கையாள விரும்பவில்லை. அதற்குரிய கட்டமைப்புப் பலமும் இருக்கவில்லை. எனவே கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.அந்தப் பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய அனுபவம்.கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதிச் செயல்படுவது என்பது.
ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறான ஓர் அனுபவந்தான். ஆனால் அங்கே புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாகியது. அது தேர்தலில் ஒரு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது.கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் சுமார் ஒன்றரை லட்சம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
ஒரு பெரிய ஊடகத்தின் முதலாளி மக்கள் அமைப்பிடம் சொன்னார் “கிழக்கில் இருந்து கொண்டு வரும் ஒரு வேட்பாளருக்கு வடக்கில் வாக்களிப்பார்களா?” என்று. “ஒரு பத்தாயிரம் வாக்குகள் கிடைக்குமா” என்று கேட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு வாக்குகள் கிடைத்தன.
தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் அரசியலில் தமிழ் மக்களுக்கு ஒரு புது அனுபவம். தமிழ்ப் பொது வேட்பாளரை இந்தியாவின் புரஜக்ட் என்று கூறி நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது சிவில் சமூகங்கள் முன் கை எடுத்ததனால் உருவாகிய திரட்சி என்ற பொருள்பட அதை வியாக்கியானம் செய்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளை தேசியவாத வாக்குகள் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.அது காலத்தால் பிந்திய ஞானம்.கஜேந்திரக்குமாரை அந்த அணிக்குள் இணைப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை கடுமையாக உழைத்தது.ஆனால் கஜேந்திரன் ஒரு சந்திப்பின்போது சொன்னார் “இந்த விடயத்தில் நீங்கள் வென்றால் நாங்கள் எங்களிடம் இப்பொழுது இருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.அதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறோம்.” என்று.
சிறீதரன் சொன்னார் “மக்களமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை இறக்கப் போவதாக எமது ஆதரவாளர்கள் கதைக்கிறார்கள்” என்று. ஒரு மூத்த அரசியல்வாதி மற்றொரு மூத்த அரசியல்வாதி மற்றொரு கட்சியின் தலைவரிடம் கூறினாராம் “இவங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம்” என்று.
சுமந்திரன் அதனை மூர்க்கமாக எதிர்த்தார். அதை ஒரு கேலிக் கூத்து என்று வர்ணித்தார். மக்கள் அமைப்பைக் கடுமையாக எச்சரித்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் “வீணாய் போகும் வாக்குகள்” என்று எச்சரித்தார்.அதனை அவர் சஜித்தின் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.
தமிழ் ஊடகங்களிலும் ஒரு பகுதி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இருந்தது. ஊடகவியலாளர்களில் சிறு பகுதியினர் எதிராக இருந்தார்கள். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் முகநூலில் எழுதினார் “கட்டுரை எழுதுவது வேறு தேர்தலில் வேட்பாளர் நிறுத்தி வெல்வது வேறு இரண்டும் ஒன்று அல்ல” என்று. தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த கருத்துருவாக்கிகளை சில ஊடகவியலாளர்களும் சில யூடியூப் வெறுப்பர்க்களும் எதிரியைவிடக் கேவலமாக சிறுமைப்படுத்தினார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் பயந்தார்கள். பெரும்பாலான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் பயந்தார்கள். அல்லது உஷார் அடைந்தார்கள். “நாடு முழுவதும் மாற்றத்துக்காக நிற்கும் பொழுது நீங்கள் மட்டும் அதற்கு எதிராக போகப் போகிறீர்களா” என்று அனுர கேட்டார்.தமிழ் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது. முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் சொன்னார்.”தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பொதுவான பேரழிவு”என்று சஜித் எச்சரித்தார்.
ஆனால் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைத்தார்.தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகளை அவர் வென்றார்.
எனினும் பொது வேட்பாளருக்கு கிடைத்த அடிப்படை வெற்றியை கொண்டாட முடியவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த தேர்தலை கையாள்வதற்கு மக்கள் அமைப்பு தயாராக இருக்கவில்லை.
மக்கள் அமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் கிளம்பின. அதனால் மக்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.மக்கள் அமைப்பு தேர்தலைக் கையாளாத ஒரு பின்னணியில்,வெற்றிபெற்ற சின்னத்தைத் தாங்கள் சுவிகரிப்பது என்று பொதுக் கட்டமைப்புக்கள் இருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அது பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது.அதன் விளைவாக கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு சோதனைக்கு உள்ளாகியது. சங்குச் சின்னத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை.ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைக்கப்படாத கட்சிகள் மீண்டும் சிதறின. அதிகரித்த அளவில் சுயேச்சைகள் தோன்றின.தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தண்டனையாக அமைந்தன.
அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரே அளவு ஆசனங்கள்.தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை மேலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாகத் திரட்டுவது.ஆகப் பெரிய திரளாகத் திரட்டுவது. அவ்வாறு திரட்டப்படாத காரணத்தால்தான் இம்முறை தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை குறைந்தது.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தமிழரசுக் கட்சியும் உட்பட எல்லாக் கட்சிகளும் தோல்வியடைந்து விட்டன.
எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவுகளை வெளியே கொண்டுவந்தன.எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளைப் பலப்படுத்தியது. இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரனுபவம் அது. கட்சிகளைக் கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளை அது புதுப்பித்தது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக உழைத்தால் மட்டும்தான் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் வெற்றி பெறலாம்.