இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று (30) நடைபெறவுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதலானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமகவுள்ளது.
மிட்செல் சான்ட்னர் தலைமையில், நியூசிலாந்து இந்த தொடரில் அற்புதமான தொடக்கத்தை பெற்றது.
லிங்கனில் சனிக்கிழமை (28) நடைபெற்ற பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் இலங்கையை எட்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து.
டாப்-ஆர்டர் சரிவு இருந்தபோதிலும், டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரின் பரபரப்பான அரைசதங்களுடன் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 172 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியிருந்தது.
இந்த நிலையில் இன்று ஆரம்பமாகும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேநேரம், இரண்டாவது போட்டியிலும் வெற்றிக் கணக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து டி20 தொடரை கைப்பற்றும் நோக்குடன் நியூஸிலாந்து உள்ளது.