குடும்பத் தகராறு காரணமாக உத்தரபிரதேசத்தில் இளைஞன் ஒருவர், தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை லங்னோவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் வைத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இரவு கொலை செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான அர்ஷத் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிக்கட்டில் வெட்டுக் காயங்களுடனும், ஆடைகள் ரத்தத்தில் நனைந்த நிலையில் 5 பேரும் குறித்த ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர்கள் சாப்பிட்ட உணவில் போதைப்பொருள் கலந்து இருந்தது தெரியவந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் சிலர் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டதாகவும், ஏனையவர்கள் பிளேடால் அறுத்து கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களுக்கும் மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை வழக்கில் அர்ஷாத்தின் தந்தை பதர் என்பவரையும் பொலிஸார் சந்தேக நபராக பெயரிட்டுள்ளனர்.
அவர் இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ராவைச் சேர்ந்த குடும்பம், டிசம்பர் 30 முதல் ஹோட்டலில் தங்கியிருந்தது.
இறந்தவர்கள் அர்ஷத்தின் தாய் அஸ்மா, அர்ஷத்தின் சகோதரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் முறையே 9, 16, 18 மற்றும் 19 வயதினை உடையவர்கள் ஆவர்.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.