தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார்.
விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.
விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எட்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், விபத்தில் இருவர் உயிரிழந்ததாக புல்லர்டன் நகர பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விமானத்தில் இருந்தார்களா அல்லது தரையில் இருந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
நான்கு இருக்கைகள் கொண்ட ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்துக்குள்ளானதை விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் குறிப்பிட்டது.
புல்லர்டன் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் சுமார் 140,000 மக்கள் வசிக்கும் நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.