சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய – லடாக்கின் அதிகார வரம்புக்குட்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது.
இதற்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பில் டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்தும் வழங்கப்பட மாட்டாது. 2 புதிய நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு ராஜதந்திர ரீதியாக சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்திய எல்லையையொட்டி, தமது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே ஒரு டிரில்லியன் யுவான் செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
எனினும் பிரம்ம புத்திரா நதிநீரைப் பயன்படுத்தும் உரிமை இந்தியாவுக்கும் உள்ளது.
இதனால் சீனாவில் பாயும் அந்த நதியில் மிகப் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்தும் ராஜதந்திர ரீதியில் தங்களது கருத்துக்களையும் கவலைகளையும் சீனாவுக்கு வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.