சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.
எவ்வாறெனினும், இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தை அடுத்து சமூக ஊடக பதிவுகள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களையும், மீட்பு பணிகளையும் வெளிக்காட்டுகின்றன.
அனர்த்தத்தை அடுத்து தீபத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்கும் முழுமையான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் அங்கு சொத்து சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் பெரிய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதி, அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு தாயகமாக உள்ளது.
2015 ஆம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.