அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய ஒன்பது தொழிலாளர்களில் ஒருவரின் உடல் புதன்கிழமை (08) இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டது.
மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்வதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகளை இராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அடங்கிய குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளன.
எனினும், சுரங்கத்தில் சிக்கியுள்ள எஞ்சியுள்ள எட்டு தொழிலாளர்களும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக தோன்றுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உம்ராங்சோவின் 3 கிலோ பகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் திடீரென நீர் பெருக்கெடுத்து ஓடியதை அடுத்து, தொழிலாளர்கள் திங்கள்கிழமை (06) அதில் சிக்கிக் கொண்டனர்.
சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக நீர்மூழ்கிக் குழுவினர் நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளம் சூழ்ந்த குழிக்குள் கப்பி மூலம் நுழைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போதே புதன்கிழமை அதிகாலை ஒரு தொழிலாளரின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், தொழிலாளரின் அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.