கோவாவின் வடக்கு பகுதியில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்த 27 வயது பெண் சுற்றுலாப் பயணியும் அவரது பயிற்றுவிப்பாளரும் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாக இந்திய பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சனிக்கிழமை (18) மாலை 5.00 மணியளவில் கெரி கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் புனேவில் வசிக்கும் ஷிவானி டேபிள் என்ற பெண்ணும், அவரது பயிற்றுவிப்பாளரான 26 வயதுடைய நேபாள நாட்டைச் சேர்ந்த சுமால் நேபாலி என்ற நபருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.
அவர்கள் ஒரு குன்றிலிருந்து பாராகிளைடர் பறக்க ஆரம்பித்த சிறுது நேரத்திலேயே பள்ளத்தாக்கில் வீழ்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாகசத்தை நடத்தும் பாராகிளைடிங் நிறுவனம் உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும், சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அது சுற்றுலா பயணிகளுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந் நிலையில், மனித உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காக நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரைசாடா மீது மாண்ட்ரெம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.