எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான தனது அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்வரும் தொடர்களுக்கான இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கிய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துடான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதேநேரம் துணைத் தலைவராக சுப்மான் கில் நியமிக்கப்பட்டார்.
இந்த முடிவு, ஒரு தொடக்க ஆட்டக்காரராக அணியில் சுப்மான் கில்லின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், மொஹமட் ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பெப்ரவரி 06 ஆம் திகதி தொடங்கும் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு ஹர்ஷித் ராணா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.