மாத்தறை – தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே தெரிவித்துள்ளார்.
விபத்தில் ஒரு வெளிநாட்டவர் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விபத்தின் பின்னர் தடைப்பட்டிருந்த வீதியூடான போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மழையுடன் கூடிய காலநிலையின் போது இந்த இரண்டு பஸ்களும் அதிவேகமாக பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.