கேரளாவில் 18 வயதான யுவதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தலித் இன யுவதி ஒருவர் அங்குள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். அவரது நடத்தையில் மாற்றம் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு குழந்தைகள் நல குழுவினர் உளவியல் ஆலோசனை அளித்தனர். இதன்போது அவர் தனது 13 வயது முதல் தன்னை 62 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறினார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து ஐ.பி.எஸ் அதிகாரி அஜிதா பேகம் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது , ‘கடந்த ஆண்டு குறித்த யுவதி 12-ம் வகுப்பு படிக்கும்போது இன்ஸ்டாகிராமில் நெருக்கமான இளைஞர் ஒருவர் அவரை றப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனவும், அதன்பின்னர் அவரை பலர் பல்வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனவும், இதுவரை 5 முறை, யுவதி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்’ எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ் வழக்கை கண்காணித்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஜி.வினோத் குமார் கூறியதாவது: இந்த விவகாரத்தில் முதல் வழக்கு இலவம்திட்டா காவல் நிலையத்தில் கடந்த 10-ம் ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. விரிவான விசாரணைக்கு பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் வெளிநாட்டில் இருக்கும் இருவரை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை காலை 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 காவல் நிலையங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் 5 சிறுவர்களும் அடங்குவர். விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.