ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு, கட்சியின் செயற்குழு பூரணமான அனுமதியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித்த சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இதன்போது கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கும் வகையில் கட்சி ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் அந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று எமது வேலைத்திட்டங்களை ஊடகள் மூலம் பிரசாரம் செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி எமது கொள்கையை உடைய கட்சி அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொர்பில் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ருவன் விஜேவர்த்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஆகியோருக்க கட்சியின் செயற்குழு அனுமது வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு சக்தியாக அரசாங்கத்துக்கு முகம்கொடுப்பதே எமது நோக்கம். நடைபெற்று முடிந்த அதிகமான கூட்டுறவு சங்க தேர்தல்களின் நாங்கள் இணைந்து போட்டியிட்டதால், எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதனால் ஏனைய கூட்டுறவு சங்க தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடவே எதிர்பார்க்கிறோம். இந்த வெற்றி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் தாக்கம் செலுத்தும்” இவ்வாறு ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.