காசா பகுதியில் 15 மாத காலப் போரைத் தொடர்ந்து அமலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் சில நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேலின் இராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) பதவி விலகுவதாக செவ்வாயன்று (21) தெரிவித்தார்.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீனிய ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் மீது எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியபோது ஏற்பட்ட பாரிய பாதுகாப்புக் குறைபாட்டிற்குப் பொறுப்பேற்று எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி பதவி விலகுவதாக அவர் அறிவித்தார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் லெப்டினன்ட் ஜெனரல்,
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) “இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்கும் பணியில் தோல்வியடைந்துவிட்டது.
இந்த பயங்கரமான தோல்விக்கான எனது பொறுப்பு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் என்னை வாட்டுகிறது.
அந்த மன உளைச்சல் எனது வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், ஹமாஸ் மற்றும் அதன் ஆளும் திறன்களை மேலும் சிதைப்பதற்கும், பணயக்கைதிகள் திரும்புவதை உறுதி செய்வதற்கும் இராணுவம் தொடர்ந்து போராடும்.
மேலும், ஆயுதம் தாங்கிய குழுக்களின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் தாயகம் திரும்புவதற்கு உதவும் என்று அவர் மேலும் சுட்டிக்கட்டினார்.
ஹெர்சி ஹலேவியின் அறிவிப்புக்கு பின்னர், IDF இன் தெற்குக் கட்டளைத் தலைவரான மேஜர் ஜெனரல் யாரோன் ஃபிங்கெல்மேனும் (Yaron Finkelman) பதவி விலகுவதாக அறிவித்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் அவர்களது இராஜினாமாக்கள் வந்துள்ளன.
2023 ஒக்டோபர் 7 அன்று அத்துமீறிய ஹமாஸ் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பணயக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.