தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் வருகிற 3-ம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “மன்மதன்” திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான “மன்மதன்” திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை எஸ்.கே. கிருஷ்ணகாந்த் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அந்தோனி படத்தொகுப்பு செய்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மன்மதன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.