இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26 ஆம் திகதி) இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே இவ்வாறு குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1947 ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழுவொன்று அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதன் பலனாக 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இக் குடியரசு தினமானது இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுவதோடு இந்த நாள், இந்திய மக்களுக்கு ஒரு தேசிய விழிப்புணர்வு தரும் நாளாகவும், தேசிய ஒற்றுமையும் பெருமையும் உணரப்படும் நாளாகவும் திகழ்கின்றது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படும் விதம்
இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் டெல்லி ராஜ்பாத்தில் இராணுவ அணி வகுப்புநடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார்.
முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும்.
அத்துடன்அரச தலைவர்களுக்கு முன்னிலையில் இந்தியர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெபெறும். இந்த நாளில் இந்தியாவின் முக்கியமான நகரான நியூ டெல்லி விழாக்கோலம் பூண்டு காணப்படும் என்றால் அது மிகையாகாது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருப்பார்கள். இந்த முறை குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது ஏனைய மாநிலங்களிலும், மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறன.
குடியரசு தினவிழா தொடர்பான முக்கிய தகவல்கள்
1) குடியரசு தின அணி வகுப்புக்கான தயாரிப்புகள் எல்லாம் முந்தைய ஆண்டு ஜூலை மாதமே தொடங்கிவிடும். ஒரு வருடம் முன்பு குடியரசு தின விழா அணி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்பாளராக இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்குள் அணி வகுப்பு இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த அணி வகுப்புக்காக மட்டும் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.
2. ஒவ்வொரு ஆண்டும், வேறொரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபர் குடியரசு தின அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
3. முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அடுத்த துப்பாக்கிச் சூடு 52 வினாடிகளுக்குப் பிறகு சுடப்படும். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் பீரங்கிகள் 1941 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை.
4. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு பிரத்யேகமாக ஒரு கருப்பொருள் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசுத் துறைகள் அந்த கருப்பொருளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மாநில வாகனங்களை தயார் செய்யும். இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப் பொருளுக்கான கருப்பொருள் ‘ஸ்வர்ணிம் பாரத் – விராசத் அவுர் விகாஸ்’ (தங்க இந்தியா – பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.
5. குடியரசு தின விழா நாளில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கும். ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கிஇ கர்தவ்ய பாதை வழியாக, இந்தியா கேட் வழியாக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை இந்த அணி வகுப்பு அடையும்.
6. இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர் டாக்டர் பிஆர் அம்பேத்கர். அவர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்பு வழியாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து துறைகளும் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
7. முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (இப்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றன. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,000 வீரர்களும் பங்கேற்றனர்.
8. குடியரசு தினத்தன்று, உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான துணிச்சலைக் காட்டிய குழந்தைகளை கௌரவிப்பதற்காக தேசிய துணிச்சல் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
9. இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
இந்திய குடியரசு தினம், இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் மூலம் கிடைத்த தேசிய ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் உறுதி செய்வதோடு ஒவ்வொருவரும் தனது கடமைகளை உணர்ந்து, சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒருமை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.