நாட்டில் சுற்றுலாத் துறையையும், நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக புகையிரதத் திணைக்களம் மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
மலைநாட்டு புகையிரத மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்து வருவதாலும், அதன் வலுவான ஈர்ப்பு மற்றும் அந்த பயணத்திற்கான அதிக தேவை காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், பெப்ரவரி முதலாம் திகதி முதல் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் தினசரி இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி முதல் எல்ல ஒடிஸி கண்டி என்ற புகையிரதத்தையும் , 10 ஆம் திகதி முதல் எல்ல – ஒடிஸி – நானுஓயா என்ற புகையிரதத்தையும் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான எல்ல-ஒடிஸி புகையிரத சேவை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் சேவையில் ஈடுபடும் எனவும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.