‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த ட்ரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
மேலும் ‘பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தில் வர்த்தகம் செய்து, டொலரின் மதிப்பை குறைக்க நினைத்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் கூறியிருப்பது, இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி.இக் கள் முன்னிலையில் ட்ரம்ப் நேற்று உரையாற்றிய போது ” அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது வரிகளை விதிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பினாலும், அது அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய அளவில் வரி விதிக்கின்றன எனவும், ஆனால் இனி அப்படி நடக்காது எனவும் அமெரிக்கா முதன்மையானது என்பதே எனது கொள்கையாக இருக்கும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.