எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 323 சிகப்பு அறிவிப்பு கொண்ட கொள்கலன்களை சுங்க சோதனையின்றி விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறுத்துள்ளது.
இது தொடர்பில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், எக்ஸ்போலங்கா ஒரு சரக்கு மற்றும் தளவாட சேவை வழங்குனராக மட்டுமே இயங்குகிறது என்றும் இறக்குமதியாளராக அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
கேள்விக்குரிய கொள்கலன்களுக்கான சரக்கு, தளவாடங்கள் அல்லது சுங்க அனுமதி சேவைகளை வழங்குவதில் தாமோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ ஈடுபடவில்லை என்று நிறுவனம் மேலும் கூறியது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட 323 சரக்கு கொள்கலன்களை விடுவிப்பது பற்றிய அறிக்கைகளை தெளிவுபடுத்தும் 08 அம்ச அறிக்கையை வெளியிட்ட இலங்கை சுங்கம், பொருட்களை வெளியிடும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை விரிவாகக் கூறியதுடன், சில ஏற்றுமதிகளை பரிசோதிப்பதில் ஏற்படும் தாமதங்களையும் தெளிவுபடுத்தியது.
எக்ஸ்போ லங்கா என்ற பெயரில் கொள்கலன்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறிய சுங்க அதிகாரிகள், துப்பாக்கிகள், தங்கம் அல்லது போதைப் பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவோ அல்லது கொள்கலன்களை விடுவிப்பதால் சுங்க வருவாய் இழப்புகளோ ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
பரிசோதிக்கப்படாமல் சிவப்பு அறிவிப்பிலிருந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவினால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் உரையாற்றிய துறைமுக பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவாக்கு, சோதனையின்றி கொள்கலன்களை விடுவிப்பது அசாதாரணமானது எனவும், செயற்பாட்டுத் தடைகளை நிர்வகிப்பதற்கு குறிப்பிட்ட அளவுகோல்களின் கீழ் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
















