அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் இரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய நிதியமைச்சகம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் தரவு பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி DeepSeek ஐப் பயன்படுத்துவதற்கு இதே போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
புதன்கிழமை, OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்திக்கவுள்ள நிலையில், திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன்னதாக செவ்வாயன்று சமூக ஊடகங்களில் இந்த ஆலோசனை அறிக்கைகள் வெளிவந்தன.
“அலுவலக கணினிகள் மற்றும் சாதனங்களில் உள்ள AI கருவிகள் மற்றும் AI பயன்பாடுகள் (ChatGPT, DeepSeek போன்றவை) (அரசு) தரவு மற்றும் ஆவணங்களின் இரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று ஜனவரி 29 திகதியிட்ட இந்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசனை கூறுகிறது.
ChatGPT-OpenAI மற்றும் DeepSeek ஆகியவற்றின் பிரதிநிதிகள் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு இந்திய நிதியமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்த தகவல் உண்மையானது என்றும், இந்த வாரம் உள்நாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் மூன்று நிதி அமைச்சக அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளனர்.
எனினும், ஏனைய இந்திய அமைச்சகங்களுக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையால் உடனடியாக உறுதிப்படுத்த முடியாது போனதாகவும் கூறியுள்ளது.