லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, விடுவிப்பது தொடர்பான சட்டமா அதிபரின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் தீர்மானத்தை அமைச்சரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ளது.
இதில், சட்ட மா அதிபர் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றாலும், அவர் ஒரு நீதித்துறை சார்ந்த பதவியை வகிக்கிறார் என்றும், கிடைக்கக்கூடிய சான்றுகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது.
வழக்குத் தொடரும் தீர்மானங்களில் அரசியல் தலையீடு சட்ட மா அதிபரின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
சட்ட மா அதிபரின் தீர்மானங்களை ரிட் அல்லது அடிப்படை உரிமைகள், உட்பட நீதித்துறை செயல்முறைகள் மூலம் மதிப்பாய்வு செய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீதித்துறை மற்றும் நீதித்துறை தீர்மானங்கள் எப்போதும் பொதுக் கருத்துடன் ஒத்துப்போகாது என்று தெரிவித்துள்ள குறித்த சங்கம், சட்டத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதியை வலியுறுத்தியது.