பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை கிழித்துத் தொங்க விட்டார்கள் என்று கூறிச் செய்திகளும் காணொளிகளும் நேற்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.யுடியுப்பர்களுக்கு சூடான, உணர்ச்சிகரமான விடயங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் வழமைபோல தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இல்லாத காணொளித் துண்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக மேலெழுந்து வருகின்ற ஒரு போக்கு இது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டிக் களத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளே அவை. அந்த விவாதப் போட்டிகளின் தலைப்புகள் பெரும்பாலும் அரசியல் பரிமாணத்தைக் கொண்டவை. அதனால் மாணவர்கள் அரசியல்வாதிகளை விளாசித் தள்ளுவார்கள். அவ்வாறு பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை விளாசித் தள்ளுவதை தமிழ்ச் சமூகம் ரசிக்கின்றதா?
இம்முறை விவாதப் போட்டிக்கான தலைப்பு “ஈழமணித் திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும். இதில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் அரச அலுவலர்களே காரணம் என்று வாதிட்டார்கள். கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் அரசியல்வாதிகளே காரணம் என்று வாதிட்டார்கள். இந்த வாதப்பிரதிவாதங்களின் போது இருதரப்பும் அரசியல்வாதிகளையும் அரச அலுவலர்களையும் விளாசித் தள்ளினார்கள்.
அரச அலுவலகங்களின் மீது குறிப்பாக மருத்துவ சுகாதாரத் துறையின் மீது விமர்சனங்களை முன்வைத்து அதன் மூலமே பிரபல்யமாகி, அந்த பிரபல்யத்தை முதலீடாக்கி, ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில், அந்த மருத்துவர் தொடர்ந்தும் ஒரு சர்ச்சைப் பொருளாக, விவாத பொருளாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், அரச அலுவலர்களையும் அரச அலுவலகங்களையும் தாக்குவது என்பது அதிகம் ஆர்வத்தோடு கவனிக்கப்படும். இம்முறை விவாதப் பொருளாக அது எடுக்கப்பட்டதன் பின்னணியில் அந்த சமகால முக்கியத்துவமும் உண்டு.
இதற்கு முந்திய ஆண்டுகளில் இவ்வாறான விவாதக் களங்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் விமர்சிக்கப்படுவதுண்டு. ஆனால் இம்முறை அரசு அலுவலர்கள் மீதும் விமர்சனங்கள் பாய்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்து தமிழ் அரசியலில் எழுச்சி பெற்று வருகின்ற ஒரு புதிய தோற்றப்பாடு இது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பள்ளிக்கூட பிள்ளைகள் அரசியல்வாதிகளையும் அரச அலுவலர்களையும் விமர்சிக்கின்றார்கள் என்பதல்ல. அந்த விமர்சனங்களை ரசிக்கும் ஒரு மனோநிலை சமூகத்தில் காணப்படுகிறது என்பதுதான். அதுதான் அர்ஜுனா என்ற நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்தது. இன்று வரை அவரை ஒரு பேசு பொருளாக வைத்திருக்கின்றது.
இந்த விமர்சனத்தை முன்வைக்கும் மாணவர்களில் எத்தனை பேர் புதிய வாக்காளர்கள் என்பது தெரியவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அப்புதிய வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் யாரோ ஒரு அரசியல்வாதிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். இந்த எல்லா அரசியல்வாதிகளையும்தான் அந்த மாணவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அப்படியென்றால் அந்த அரசியல்வாதிகளை தெரிந்தெடுத்த தமது பெற்றோரையும் ஆசிரியர்களையும் தாம் வாழும் சமூகத்தையும் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பொருள்.
அவ்வாறு அவர்கள் தமது பெற்றோரால் ஆசிரியரால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விவாதப் பொருள் ஆக்குவதை இந்த சமூகம் ரசிக்கிறது என்பது அரசியல்வாதிகள் மீதும் அரசு அலுவலர்கள் மீதும் இந்த சமூகம் எந்தளவுக்கு வெறுப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றதா?
ஆனால் இது உலகின் பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் காணப்படும் ஒரு பொதுவான அம்சம். மாணவர்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகளுக்கு அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பார்கள். அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்புணர்ச்சி என்பது எப்பொழுதும் மாணவ சமூகத்தின் மத்தியில் இருக்கும். ஆனால் அதே அதிகாரத்துக்கு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ வாக்களித்தும் இருப்பார்கள். இந்த முரண்பாடும் எல்லா ஜனநாயகப் பரப்புகளிலும் இருக்கும்.
இள ரத்தம் எப்பொழுதும் அப்படித்தான் கொதிக்கும். அதுதான் கடந்த சில ஆண்டுகளாக இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான விவாத மேடைகளில் காணப்படும் பொதுப் பண்பாகும். இது போன்ற விவாத மேடைகளில் வெளிப்படையாக அரசியல் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானது. பாடசாலை மாணவர் இதுபோன்ற விவாதப் போட்டிகளுக்காக அரசியலை ஆழமாகக் கற்பது வரவேற்கத் தக்கது. விவாதக் களங்களில் உணர்ச்சி பொங்கப் பேசுபவர்களுக்கே கை தட்டல்கள் அதிகம் கிடைக்கும். எனினும் அங்கு அரசியல் அறிவுபூர்வமாக, தர்கபூர்வமாக ,கணிதமாகப் பயிலப்படுகின்றது. இது தமிழ்த் தேசிய அரசியலை அறிவியல் மயப்படுத்த உதவும்
மேலும் இந்த விமர்சனங்களை சமூகம் ஏன் அத்துணை ஆர்வமாக ரசிக்கிறது என்பதற்கு பின்னால் உள்ள கூட்டு உளவியலை அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது மாணவர்கள் விவாதத்துக்காக ஒரு சுவாரசியத்துக்காக `என்டெர்டெயின்மென்றுக்காகச்` செய்யும் விளையாட்டு; இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்புவது தெரிகிறது. ஏனென்றால் இந்த விவாத மேடைகளில் கூறப்பட்ட கருத்துக்களை செவிமடுத்து அரசியல்வாதிகள் தங்களைத் திருத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற விவாத மேடைகளில் கூறப்படும் விமர்சனங்களைத் தமிழ்ப் பொதுப் புத்தியானது ரசிக்கிறது என்ற ஒரு அடிப்படை உண்மை இங்கு உண்டு.
தமது அரசியல்வாதிகளை குறிப்பாக தாங்கள் தெரிந்தெடுத்த தங்களுடைய பிரதிநிதிகளையே அவ்வாறு விமர்சிக்கும் ஒரு போக்கு ஏன்? எங்கிருந்து வருகிறது? ஆழமான வெறுப்பும் அவநம்பிக்கையும் அதிருப்தியும் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தீர்ப்புகள் அதன் பிரதிபலிப்பா ?
இந்த இடத்தில் இது ஒரு சம்பந்தப்பட்ட மற்றொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மீனவ அமைப்புக்கள், கமக்கார அமைப்புகள் போன்ற மக்கள் அமைப்புகளை தொடர்ச்சியாகச் சந்தித்த பெரும்பாலான சந்திப்புகளின்போது ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் வலியுறுத்திக் கூறப்பட்டது. அது என்னவென்றால், “நீங்கள் தனியே வாருங்கள். கட்சிகளோடு வராதீர்கள். கட்சிகள் வேண்டாம்.” என்பதுதான். தென்மராட்சியும் உட்பட சில இடங்களில் “நீங்கள் சுயேட்ச்சையாக நில்லுங்கள்” என்றும் கேட்கப்பட்டது.
எனவே மாணவர்கள் அரசியல்வாதிகள் மீதும் கட்சிகள் மீதும் வைக்கும் விமர்சனங்களை இளவயதினர் அதிகாரத்தில் இருப்பவர்களின் மீது முன்வைக்கும் வழமையான விமர்சனங்கள் என்று கூறித் தட்டிக் கழித்துவிட்டுப் போக முடியாது. தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை இழப்பு அதிகரித்து வருகிறது. தாங்கள் வாக்களித்த அரசியல்வாதி மீதே தமிழ் மக்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. “என்ன செய்வது? வேறு தெரிவு இல்லை. அதனால் அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்” என்பதைத்தான் அது காட்டுகின்றதா?
எனவே மாணவர்களின் விவாத மேடைகளில் வெளிப்படும் கருத்துக்களில் இருந்து தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் குறிப்பாகத் தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் தொகுத்துக் கற்க வேண்டிய ஒரு விடயம் உண்டு. “அது இள ரத்தம் ,வழமை போல கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது” என்று கூறிக் கடந்து போய்விட முடியாது. அது முழுச் சமூகத்துக்குள்ளும் பரவியிருக்கும் ஓர் அதிருப்தி.அல்லது சலிப்பு. அல்லது வெறுப்பு என்று கூடச் சொல்லலாம். எனவே இந்த விமர்சனங்களை நிதானமாக அணுக வேண்டும். இதுபோன்ற விமர்சனங்கள் சமூகத்தின் ஏனைய தரப்புகள் மத்தியிலும் உண்டா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் தமிழ் தேசிய அரசியலை மேலும் செழிப்பாக்க உதவும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்துக்களின் விவாதச் சமருக்கு பின்னரும் இப்படி ஒரு கட்டுரை எழுதும் ஒரு நிலைமை வரக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் தாயகத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்துவிட்டன.