படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை விடுவிக்குமாறு தாம் முன்வைத்த உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளரிடம் அறிவித்தார்.
முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்ஐ திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரை மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அரசாங்கம், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாகக் கூறியது.
இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமரை வலியுறுத்தி லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கடிதம் எழுதியதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.