ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி ஆகியவை வியாழக்கிழமை (13) வணிக ஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தைகளை கைவிடுவதாகக் கூறின.
ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை பரிசீலிப்பது தொடர்பான உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வாகன உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதாக இது தொடர்பான அவர்களின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார் நிறுவனமும் நிசான் மோட்டார் கார்ப்பரேஷனும் 2024 டிசம்பரில் ஒரு கூட்டு ஹோல்டிங் நிறுவனத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதாக அறிவித்தன.
அந்தக் குழுவில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் கூறியிருந்தது.
டெஸ்லா மற்றும் BYD போன்ற சக்திவாய்ந்த புதிய நிறுவனங்களின் வருகையாலும், மின்சார வாகன நகர்வாலும் ஆட்டம் கண்ட ஒரு துறையில் அவற்றின் மாதிரி வரிசைகளும் பலங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், தொடக்கத்திலிருந்தே, இந்த முயற்சி எந்த நிறுவனங்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஜூன் மாதத்திற்குள் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஹோல்டிங் நிறுவனத்தை அமைக்க முயற்சிப்பதாக ஹோண்டாவும் நிசானும் ஆரம்பத்தில் தெரிவித்தன.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் ஏன் முடிவுக்கு வந்தன என்பது குறித்த விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
எனினும், மூன்று வாகன உற்பத்தியாளர்களும் மின்சார வாகனங்கள் மற்றும் தன்னியக்க ஓட்டுநர் போன்ற ஸ்மார்ட் கார்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவார்கள் என்று அவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஹோண்டா மிகவும் சிறந்த நிதி நிலையில் உள்ளது மற்றும் கூட்டு நிர்வாகக் குழுவில் முன்னிலை வகிக்க இருந்தது.
2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிசான் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாக அறிவித்தது, ஏனெனில் அதன் வாகன விற்பனை சரிந்தது, இதனால் 9,000 வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், தலைமை நிர்வாகி மகோடோ உச்சிடா முடிவுகளுக்குப் பொறுப்பேற்க 50% சம்பளக் குறைப்பை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.