பெப்ரவரி 19 ஆம் திகதி தொடங்க உள்ள 2025 ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2017 க்குப் பின்னர் முதல் முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் நிலையில் எட்டு அணிகள் முதலிடத்துக்கான பெரும் பரிசுத் தொகையான 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக போட்டியிடும்.
இரண்டாம் இடத்தைப் பெறுபவர்கள் $1.12 மில்லியனைப் பெறுவார்கள்.
அதேநேரத்தில், அரையிறுதியில் தோல்வி அடையும் ஒவ்வொரு அணிக்கும் தலா 560,000 டொலர்கள் கிடைக்கும்.
2017 சீசனிலிருந்து மொத்த பரிசுத் தொகை 53 சதவீதம் அதிகரித்து $6.9 மில்லியனை எட்டியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில், ஒவ்வொரு குழு நிலை போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டொலர்கள் வழங்கப்படுவது பிரதானமாக இருப்பதால் ஒவ்வொரு ஆட்டங்களும் முக்கியமானதாக இருக்கும்.
தொடரில் ஐந்தாவது, ஆறாவது இடத்தை பெறும் அணிகள் தலா 350,000 டொலர்களை பெறுவார்கள்.
அதே நேரத்தில் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெறும் அணிகள் 140,000 டொலர்களை பெறுவார்கள்.
மேலதிகமாக நிகழ்வில் பங்கேற்பதற்காக அனைத்து எட்டு அணிகளுக்கும் தலா 125,000 டொலர்கள் வழங்கப்படும்.
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஐசிசியின் ஒரு பெரிய நிகழ்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகள் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்கள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும்.
இதில் உலகின் முதல் எட்டு ஒருநாள் அணிகள் போட்டியில் விளையாடும்.
அதேநேரத்தில், மகிளர் சாம்பியன்ஸ் டிராபி டி20 வடிவத்தில் 2027 இல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.