டி:20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் இருந்தபோதிலும் எட்டு வருட இடைவெளிக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் விளையாடப்படுவது சர்வதேச ஒருநாள் (ODI) கிரக்கெட் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக இருக்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான இறுதிப் போட்டியை கொண்டமைந்த ஒரு வெற்றிகரமான சாம்பியன் டிராபி சீசனாக 2017 ஆம் ஆண்டு இருந்தது.
எனினும், அதன் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் கைவிடப்படுமா என்ற ஊகங்களுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் இப்போது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவில் சாம்பியன்ஸ் டிராபியை புதுப்பித்து நடத்தவுள்ளது.
அது மாத்திரமில்லாமல் 2029 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் வடிவத்தையும் அறிவித்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்துக்கு புத்துயிர் அளித்துள்ளது.
முதல் டி:20 உலகக் கிண்ணத்தின் வெற்றிக்குப் பின்னர், ஒருநாள் கிரிக்கெட் குறிப்பிடத்தக்க சரிவினைக் கண்டது.
1990 மற்றும் 2006 க்கு இடையில் ஒருநாள் போட்டிகள், கிரிக்கெட்டின் நிதி முதுகெலும்பாக இருந்த போது, மொத்தம் 1,871 ஆட்டங்கள் விளையாடப்பட்டன.
அதே காலகட்டத்தில், 12 டி:20 போட்டிகள் மட்டுமே நடந்தன.
2007 ஆம் ஆண்டு தொடக்க டி:20 உலகக் கிண்ணத்துக்கு பிறகு இந்த முறை வியத்தகு முறையில் மாறியது.
அன்றிலிருந்து இன்று வரை 2,373 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.
அதேநேரம், 3,080 டி:20 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.
வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அணிகளைப் பார்க்கும்போது இந்த போக்கு இன்னும் அதிகமாக உள்ளது.
2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முடிவில் இருந்து, இந்த எட்டு அணிகளும் மொத்தம் 229 டி:20 போட்டிகளில் விளையாடியுள்ளன.
ஆனால், 101 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவை களம் கண்டுள்ளன.
கடந்த ஆண்டு டி:20 உலகக் கிண்ணத்துக்கான கட்டமைப்பில், அணிகள் குறுகிய வடிவத்திற்கு முன்னுரிமை அளித்தன – இது சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
இதனிடையே, கிரிக்கெட் சந்தையின் மிகப்பெரிய அச்சாணியான இந்தியா, கடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது—வெறும் 9.
இதற்கு மாறாக இலங்கை அணி 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடியுள்ளன, அவுஸ்திரேலியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவம், அதிரடியான மற்றும் விரைவான டி:20 கிரிக்கெட்டின் எழுச்சியுடன் ஊசலாட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டின் போராட்டங்கள் மறுக்க முடியாதவை.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கவலைகளை குறைத்து மதிப்பிட்டாலும், எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிப்பது கடினம்.
2022 ஆம் ஆண்டில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் ஒருநாள் கிரக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார்.
அதே ஆண்டில், தென்னாப்பிரிக்கா தனது உள்நாட்டு டி:20 லீக்கிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கான ஒருநாள் சுற்றுப்பயணத்தை கைவிட்டது.
இது ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதியை இழக்கும் அபாயத்திலும் கூட தென்னாப்பிரிக்கா மேற்கொண்ட முடிவாக இருந்தது.
இதனிடையே பல முன்னணி சர்வதேச வீரர்களும் தேசிய ஒப்பந்தங்களில் இருந்து விலகி, நிதி பாதுகாப்பு மற்றும் உரிமையை அடிப்படையாகக் கொண்ட டி:20 லீக்குகளின் நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி உள்ளிட்டோரும் உஸ்மான் கவாஜாவும் ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான ஒருநாள் கிரிக்கெட் வடிவத்துக்கான போராட்டங்கள் இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணம் அதன் வடிவமைப்பை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தியது.
பரபரப்பான போட்டிகள், வியத்தகு முடிவுகள் மற்றும் உயர்தர கிரிக்கெட்ட அனுபவத்தை வழங்கியது.
இது 50 ஓவர் கிரிக்கெட் ஒரு காலத்தில் விளையாட்டில் ஏன் ஆதிக்கம் செலுத்தியது என்பதை ரசிகர்களுக்கு நினைவூட்டியது.
இவ்வாறான பின்னணியில் எட்டு ஆண்டுகளின் பின்னர் ஆரம்பமாகவுள்ள எட்டு அணிகளை கொண்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த தசாப்தத்தில் பார்வையாளர்களை இழந்த ஒரு கிரிக்கெட் வடிவத்துக்கான ஆர்வத்தை மீண்டும் தூண்டும் சக்தியாக அமையுமான என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இருப்பினும், ஒன்று நிச்சயம் – பல நாடுகளின் போட்டிகள், முத்தரப்பு தொடர்கள் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணம் என்பன ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னோக்கி செல்லும் வழியாகவும் உள்ளது.