ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கீழே தவறி
விழுந்து உயிரிழந்துள்ளார்.
பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே குறித்த வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் எனவும், அவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில் உள்ள எல்ல பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார் எனவும், அந்த நேரத்தில் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி கீழே விழுந்துள்ளார் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.