டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.
டெல்லி மாநிலத்தில் சுஷ்மா சுவராஜ் (பா.ஜனதா), ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோரைத் தொடர்ந்து 4-வது பெண் முதலமைச்சராக தற்போது ரேகா குப்தா பதவி ஏற்கவுள்ளார்.
அந்தவகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜனதா மந்திரி சபை பதவி ஏற்கவுள்ளது.
இப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருந்ததாவது:-
”என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், முதலமைச்சர் பொறுப்புக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காகவும், அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வ நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய இந்த நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உந்துதலையும் ஏற்படுத்தியுள்ளது. நான் முழு அளவில் நேர்மையாகவும், ஒருமைப்பாட்டுடனும் மற்றும் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அதிகாரம் பெறுவதற்காக மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய வாய்ப்பில் நான் முழு அளவில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவேன்”இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.