துபாயில் நடைபெறும் champions trophy 2025 தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 10 ஓவர்களுக்குள் 50 ஓட்டங்களை கூட பெறாமல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49.4 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 228 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.
பங்களாதேஷ் அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ஜேகர் அலி 68 ஓட்டங்களையும், ரிடோய் 100 ஓட்டங்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
229 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை கடந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 22 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
மேலும், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினர். மறுப்பக்கம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை குவித்தது. சுப்மன் கில் 101 ஓட்டங்களுடனும், கே.எல். ராகுல் 41 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.