தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தேசபந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறப்படும் 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரிக்கவுள்ளது.
இந்த மனுக்கள் மே 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்தை எதிர்த்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2011 ஆம் ஆண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உட்பட கடந்த கால பதிவுகள் காரணமாக தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மனுதாரர்கள் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.