பங்களாதேஷுக்கு எதிராக நியூசிலாந்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, குழு ஏ இல் இந்தியாவுடன் இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி அறிமுகப் போட்டியில் இளம் நட்சத்திரம் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான சதம் நியூஸிலாந்து அணியை அறையிருக்கு முன்னேற்றியது.
237 சேஸிங்கில், 25 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர் ரச்சின் ரவீந்திரா ஆதிக்கத்தை வெளிப்படுத்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார்.
அதேநேரம், ரவீந்திரா தனது 26 ஆவது இன்னிங்ஸில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ஓட்டங்களை நிறைவு செய்ததுடன், நியூஸிலாந்து அணிக்காக அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
டோம் லாதமுடன் இணைந்து 129 ஓட்டங்களை நான்காவது விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார்.
இருவரும் 72/3 என்ற நிலையில் இருந்த நியூஸிலாந்து அணியை ஜோடி சேர்ந்து மீட்டெடுத்தனர்.
நியூசிலாந்தின் வெற்றியானது, பங்களாதேசத்துடன் இணைந்து போட்டியை நடத்தும் அதேநேரம் நடப்பு சாம்பியனுமான பாகிஸ்தான் அணியை வெளியேற்றியது.
தற்சமயம் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் குழு ஏ இல் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் தலா 2 வெற்றிகளுடன் அரையிறுக்கு நுழைந்துள்ளன.
போட்டி தொடர்பான சாராம்சம்
ராவல்பிண்டியில் திங்கட்கிழமை (24) ஆரம்பமான பங்களாதேஷுடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
237 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களை எடுத்து, வெற்றியிலக்கை கடந்தது.
நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக ரச்சின் ரவீந்திரா 112 (105) ஓட்டங்களையும், டோம் லாதம் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவானார்.
நியூஸிலாந்து அணி, குழு நிலைப் போட்டியில் தனது இறுதி ஆட்டத்தில் மார்ச் 02 ஆம் திகதி துபாயில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.