ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனில் 13ற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் இந்த பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க முன்னெடுத்துவரும் நிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன.
ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022ஆம் ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் ரஷ்யா இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நேற்று உக்ரைன் மீது நடத்தியுள்ளது. எனினும் ரஷ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரேனின் ஐந்து நகரங்களில் ரஷ்யா பாரிய சேதத்தை விளைவித்ததுள்ளதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் வெளியுறவு அமைச்சு இந்த தாக்குதல் சம்பவத்தின் காணொளிகளை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
உக்ரேன் மீதான யுத்தத்தை நிறுத்துவதற்கு சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.