வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நமது உடலை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, குளிர்விக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகிறது.
கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் சூட்டை தணிப்பதற்கு உதவினாலும் கூடுதலாக ஒரு சில விஷயங்களை நமது அன்றாட உணவில் சேர்ப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்க உதவும். பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்ட இந்த பாதாம் பிசின் கோடைகால டயடிற்கு ஏற்ற ஒன்றாக அமைகிறது.
இயற்கை குளிரூட்டும் பண்புகள் : பாதாம் பிசினில் நமது உடலை இயற்கையாகவே குளிர்விக்கும் விளைவுகள் அமைந்திருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு துண்டு பாதாம் பிசின் எடுத்து அதனை கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் பொழுது, அது ஜெல்லி போல மாறுகிறது. இது நமது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. பானங்கள் அல்லது இனிப்பு வகைகளில் இதனை சேர்த்து சாப்பிடும் பொழுது சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நமக்கு உடனடி நிவாரணம் கிடைத்து உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. அடிக்கடி ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அதிகப்படியான வியர்வை உண்டாகும் நபர்களுக்கும் இது குறிப்பாக பயனுள்ளதாக அமைகிறது.
நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை : நமது உடலை எப்பொழுதும் நீரேற்றமாக வைப்பது அவசியமானது என்றாலும் கோடை காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது. நமது உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து வழங்குவதற்கு இந்த பாதாம் பிசின் உதவுகிறது. நீரை தக்க வைத்து நமது உடல் நீண்ட நேரத்திற்கு நீரேற்றமாக இருப்பதை இது உறுதி செய்கிறது. கூடுதலாக எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதன் மூலமாக இந்த பாதாம் பிசின் தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. நீர்ச்சத்து இழப்பை தடுப்பதற்கும், நாள் முழுவதும் ஆற்றல் அளவுகளை பராமரிப்பதற்கும் நீங்கள் உங்களுடைய அன்றாட டையட்டில் பாதாம் பிசினை சேர்த்து சாப்பிடலாம்.
செரிமான ஆரோக்கியம் : பாதாம் பிசின் நமது செரிமான ஆரோக்கியத்தை பாசிட்டிவான விளைவுகளை உண்டாக்குவதற்கு பெயர் போனது. இது இயற்கை லாக்சேட்டிவாக செயல்பட்டு பெரும்பாலான நபர்கள் கோடைகாலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி மற்றும் வயிற்றில் அல்சர் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
ஊட்டச்சத்துக்கள் : நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பிசின் நமது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கிறது. நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால் உடல் எடையை பராமரிக்க இது சிறந்ததாக அமைகிறது. அதே நேரத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களித்து, ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. கோடைகாலத்தில் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு இந்த பாதாம் பிசினை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சரும ஆரோக்கியம் : கோடையில் நமது சருமம் மிக மோசமாக பாதிப்படைய கூடும். சன்டேன், சன்பர்ன், வியர்க்குரு போன்ற வெளிப்புற பிரச்சினைகள் மட்டுமல்லாமல் கோடை நமது சருமத்திற்கு உட்புறமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எரிச்சல் அடைந்த சருமத்தை ஆற்றி வீக்கத்தை குறைப்பதற்கு ஏற்ற வகையில் குளிரூட்டும் பண்புகள் கொண்ட இந்த பாதாம் பிசினை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, அதனை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. பாதாம் பிசினை நீங்கள் ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம் அல்லது உட்புறமாக உட்கொள்ளலாம்.
அன்றாட உணவில் பாதாம் பிசினை சேர்ப்பது எப்படி? லெமனேடு, ரோஸ் மில்க் அல்லது பிற புத்துணர்ச்சியூட்டும் பானங்களோடு சேர்த்து பாதாம் பிசினை சாப்பிடலாம். மேலும் மில்க் ஷேக், ஃபலூடா அல்லது தயிர் போன்ற இனிப்பு வகைகளோடு ஊற வைத்த பாதம் பிசினை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு ஃப்ரூட் சாலட் பிடிக்கும் என்றால் அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து சாப்பிடுவது அதன் குளிரூட்டும் விளைவையும் அதிகரிக்கும்.