இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றியம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டதுடன், மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.