மத்திய ஆபிரிக்கா நாடான கொங்கோவில் பரவி வருகின்ற மர்ம நோய் காரணமாக இதுவரையில் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று முதன்முறையாக இந்த மர்ம நோயின் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது.
வௌவாலினை உணவாக உட்கொண்ட 3 சிறுவர்களிடம் இருந்தே இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வவ்வாலினை உணவாக உட்கொண்ட குறித்த மூன்று சிறுவர்களும் தீவிரமான காச்சல் ஏற்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளனர். எனவே, மர்ம நோய் பரவலுக்கான ஆரம்பமாக இந்த சம்பவதே கருதப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
காட்டு விலங்குகளை அதிகமாக உண்ணுகின்ற இடங்களில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் வேகமாகப் பரவுவது நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆபிரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு நோய்ப்பரவல் ஏற்படுவது 60 வீதம் அதிகரித்துள்ளதாக கடந்த 2022ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியிருந்தாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மர்ம நோய் காரணமாக கொங்கோவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.