பாடசாலை மாணவர்கள், இலங்கை போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பஸ் சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
எந்தவொரு பிரஜைக்கும் இது தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்குவதில்லை எனவும், இது தொடர்பில் இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் 2025.02.28 ஆம் திகதி நாடாளுமன்றில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அந்த அமைச்சுடன் தொடர்புபட்ட அரசாங்க நிறுவங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தொழில்நுட்பம் இருந்த போதிலும், காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளின் ஆர்வம் இன்மை குறித்து வருந்துவதாகத் தெரிவித்தார்.
மீனகயா புகையிரத விபத்தில் ஆறு காட்டு யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமான சம்பவம் என்றும், அது நடந்தும், புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தம் வசம் உள்ள GPS தரவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க ஆர்வம் காட்டவில்லை என்று தலைவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த சூழ்நிலைகளைத் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகையிரதத் திணைக்களத்தில் ஒரு வினைத்திறனான முகாமைத்துவக் கட்டமைப்பை தயாரிப்பதற்காக, நாடாளுனம்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இதன்போது ஸ்தாபிக்கப்பட்டது.