புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.
இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இம்மாதம் அமையப்பெற்றிருக்கிறது.
எனவே, இம்மாதத்தினைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பின்வரும் ஆன்மீக வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
1. புனித ரமலான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல்.
2. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இம்மாதத்தில் அல்-குர்ஆனுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் விளக்கவுரைகளை வாசித்தல், அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடத்தல், பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுதல். ஒவ்வொருவரும் அதிகமதிகம் அல்-குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு ‘ஜுஸ்உ’வை ஆவது ஓத முயற்சி செய்தல்.
3. பர்ழான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு ஸுன்னத்தான தொழுகைகள், இரவுநேர தொழுகைகளிலும் அதிகமானளவு ஈடுபடுதல்.
4. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரம், ஸஹ்ர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம் போன்றவற்றில் தனக்காகவும் தனது உறவுகளுக்காகவும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் நாட்டுக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்.
5. ரமலானின் இறுதி 10 தினங்களில் புனித லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுவதால் அதனை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளல்.
6. சுயவிசாரணை (முஹாஸபா) செய்வதற்குரிய சந்தர்ப்பமாக ரமலானை ஆக்கிக் கொள்ளுதல்.
7. பொருளாதார நெருக்கடியில் சிரமப்பட்டு வாழும் ஏழை எளியவர்களுக்கு இயன்ற ஒத்தாசைகளைச் செய்தல்.
8. ஏழைகள் மற்றும் ஸகாத் பெறத் தகுதியானோர்களுக்கு தங்களது ஸக்காத்தையும், ஸதகாக்களையும் உரிய முறையில் வழங்குவதோடு நோன்பு நோற்பதற்கும் திறப்பதற்குமான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல்.
9. நன்மைகளை அதிகம் பெற்றுத்தரும் இம்மாதத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டுகளில் நேரம் கழிப்பதையும் வேறு அநாவசியமான விடயங்களில் நேரத்தை வீணடிப்பதையும் முற்றாக தவிர்ந்துகொள்ளல்.
10. இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமலானை அமல்களைக் கொண்டு மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகள், ஆலிம்கள், மஸ்ஜித் இமாம்கள், நிர்வாகங்கள் தத்தமது பிரதேசங்களில் மெற்கொள்ளுமாறு ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் இந்த ரமலான் மாதத்தின் அனைத்து பாக்கியங்களையும் தந்தருள்வதோடு அவனது ரஹ்மத்தையும் மஃபிரத்தையும் நரக விடுதலையையும் பெற்ற கூட்டத்தில் எம்மையும் தேர்ந்தெடுத்துக்கொள்வானாக!