பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாகவும், எனவே , வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.