புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு தேவைப்படும் 26,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களினால் பெறப்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ இரண்டு வருடங்களாக அவை நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சில தனிநபர்களில் வெளிநாட்டு கடவுச்சீட்டு காலாவதியானதனால் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்துடனும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினையை முடிந்தவரை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெறும்போது இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்.















