திருநெல்வேலியிலிருந்து இராமேஸ்வரத்தை நோக்கி நாம் பயணித்தவேளை அமெரிக்காவிலிருந்து ‘ வேர்களைத்தேடி…’ நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த சகோதரி நிஷேவிதாவுடனும் மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த சகோதரி பிரதீபாவுடனும் பேசிப் பழகுவதற்கான வாய்ப்புக்கிடைத்தது.
நிஷேவிதா அமெரிக்காவில் வாழும் ஒருவர். இவரது பெற்றோர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் மிக அழகாக யாழ்ப்பாணத்துத் தமிழ் பேசினார்.
அங்கு அவர் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவம் படிப்பதாகக் குறிப்பிட்டார். தனது சிறுவயதிலேயே தான் இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர் மனோதத்துவம் சார்ந்த எனது சந்தேகங்களை மிகமிகத் தெளிவாகத் தீர்த்து வைத்தார். நட்புடன் பழகக்கூடிய ஒருவர். தான் தமிழகத்துக்கு வந்த நாளிலிலிருந்து பிரதீபாவுடன் சேர்ந்திருப்பதால் தங்களுக்குள் நல்ல நட்பு மலர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவிலிருந்து வருகைதந்திருந்த பிரதீபா பேச்சாற்றல் கொண்ட ஒருவராக விளங்கினார். தோற்றத்தில் இவர் நிஷேவிதாவின் சாயலைக் கொண்டிருந்தார். எங்கள் பண்பாட்டுப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஊடகத்துறையினருடனான சந்திப்பு ஏற்பட்டபொழுதெல்லாம் அவர்களது கேள்விகளுக்கு எதுவித தயக்கமும் இன்றி அவர் பேட்டி கொடுத்திருந்தமை பிரதீபா மீது எனக்கு பெரிய மரியாதையைத் தோற்றுவித்திருந்தது.

அவர்களது பேச்சினூடே இருவரும் தமிழ்மொழி மீது கொண்டிருந்த பற்றினையும் தமிழர் கலாசாரத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டினையும் புரிந்துகொள்ள முடிந்தது. வாழும் நாடுகள் வேறாயினும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு மனதினால் எம்மை நெருங்கிவரச் செய்தது. பேச்சு சுவாரசியத்தில் பயணக் களைப்பை மறந்திருந்தோம்.
நாம் இராமேஸ்வரத்தில் உள்ள அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கிவரும் ஆலய யாத்திரிகர் விடுதியை வந்தடைந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியாகியிருந்தது.
பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட அறைகளை ஆக்கிரமித்து உணவுண்டு ஓய்வு பெறச் சென்ற வேளை ஏனோ எனக்குத் தலைவலித்தது. உடல் உபாதையை உணர்ந்தேன். தொடர்ந்து வாந்தி வந்துகொண்டேயிருந்தது.
என்னோடு அறையைப் பகிர்ந்துகொண்ட சகோதரி துளசி ஒரு வைத்தியர் என்ற ரீதியில் என்னைப் பராமரிப்பதைத் தன் கடமையாகவே ஏற்றிருந்தார். மாத்திரைகளை உட்கொண்டு உறங்க எத்தனித்தபோதும் உடல் உபாதை காரணமாகத் தூக்கம் தூரம் தூரமாய் விலகி ஓடியது. நீண்ட நேரப் பிரயத்தனத்தின் பின் உறங்க ஆரம்பித்தேன்.
காலைவேளை வாந்தி மட்டுப்பட்டிருந்தது. ஆயினும் உடற்சோர்வு என்னை வாட்டி எடுத்தது. எனினும் இராமேஸ்வர இராமநாத சுவாமி ஆலயத்தைத் தரிசிப்பதிலுள்ள ஆர்வம் காரணமாக உடற் பலவீனத்தை ஒதுக்கி வைத்து புறப்படத் தயாராகி அனைவருடனும் ஆலய தரிசனம் காணச் சென்றேன்.
இவ்வாலயம் தொடர்பான வரலாறு மற்றும் ஏனைய சிறப்புக்களைப் பற்றி ஏற்கனவே இவ்வாலயத்தைத் தரிசித்து மீண்ட எனது பெற்றோர் மூலமாக அறிந்து வைத்திருந்தேன். அதனால் ஆலயத்தைத் தரிசிப்பதில் எனக்குண்டான ஆர்வம் பல மடங்காக அதிகரித்திருந்தது.
இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சுவாமி ஆலயத்துக்கும் இலங்கைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் அதன் சிறப்புக்கள் குறித்து இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில்
இராமேஸ்வரம் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். மதுரையிலிருந்து கிழக்கே 161 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது .
இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடைய இராமேஸ்வரர் ஆலயம் கி.பி 12ஆம் நூற்றாண்டுவரை கூரைக் கொட்டகையில் ஒரு துறவியின் பாதுகாப்பில் அமைந்து இருந்தது. பின்னர் கி.பி 12ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசரான மகா பராக்கிரமபாகு இத்திருக்கோயில் மூலஸ்தானத்தைக் கட்டினார் என்பதற்குரிய சான்றுகள் உள்ளன.
இக்கோயிலுக்கு தேவகோட்டை நகரத்தார் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.கோயிலின் தெற்கு இரண்டாம் பிரகாரம் இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதியினால் கட்டப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கோயில் உயர்ந்த மதிற்சுவர்களைப் பெற்று விளங்குகிறது. கிழக்கு மேற்கில் 865 அடிநீளமும் தெற்குவடக்கில் 657 அடி அகலமும் உடையது. கிழக்கு மேற்குத் திசைகளில் இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது.
வடக்குத் தெற்கில் மிகச் சிறந்த பகுதியாக நீண்ட பிரகாரங்கள் உள்ளன. இரு பக்கங்களிலும் ஐந்தடி உயரத்தின்மேல் கட்டப்பட்ட தூண்களின் நடுவே இப்பிரகாரங்கள் அமைந்துள்ளன.
தேவாரப்பாடல்பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றான இத்திருத்தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ,ஆகியோரால் பாடல்பெற்ற தலமாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம்தீர இராமர் வழிபட்டார். மணலால் ஆன இலிங்கத்தை வைத்து இராமர் ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராமநாத சுவாமி என்றும் இராம ஈஸ்வரம் (இராமேஸ்வரம்) என்றும் பெயர் பெற்றது. (இராமர் வைணவர் என்பதும் அவர் சைவர்களின் கடவுளான சிவனை வழிபட்ட இடம் இதுவென்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. )
இந்துக்களைப் பொறுத்தவரை இறைவனைத் தரிசிக்க தலயாத்திரை மேற்கொள்வது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதியாகும். அலை ஓசையுடன் கூடிய ஆழமான கடல்களும், ஆலயத்தின் அருகிலுள்ள தீர்த்தங்களும் மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுவதுடன் அவைகள் இன்றும் வணங்கப்படுகின்றன.
அதேபோன்று காசியிலுள்ள கங்கையும் ,இராமேஸ்வரத்திலுள்ள சேதுவும் மிகவும் புனிதமானவையாக விளங்குகின்றன. காசியிலிருந்து தொடங்கப்படும் யாத்திரை இராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி இராமநாத சுவாமியைத் தரிசித்த பிறகே நிறைவு பெறுகிறது
இத் தீர்த்தத்தில் நீராடி இராம நாத சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் தீர்த்தங்கள் 22 உள்ளன. இத் தீர்த்தங்களில் நீராடும் அடியார்களது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
……………….
03.01.2025 அன்று காலை நாம் ஆசாரசீலர்களாக ஆலயதரிசனம் காணப் புறப்பட்டோம். புறப்படும் முன்னரே “கைத்தொலைபேசிகளை எடுத்து வரவேண்டாம் என்றும் அவற்றை ஆலயத்தினுள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை ” என்றும் இணைப்பாளர்கள் அறிவுறுத்தியதால் அவற்றை அறைகளிலேயே விட்டுச் சென்றோம்.
ஆலயத்தினுள் எமது பாதம் பதிந்தவேளை என்னவென்று சொல்லமுடியாததொரு பரவச உணர்வு தோன்றி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வுணர்வை கதிர்காம யாத்திரையின் போதும் பலதடவைகள் அனுபவித்திருந்தேன். ( கதிர்காமம் எனப்படுவது இலங்கைக்கே உரித்தான சிறப்புத் தலங்களில் ஒன்றாகும்)
கூப்பிய கைகளும், ஆலயத்தை வலம் வந்த கால்களும் , நெஞ்சுருக வேண்டிய பிரார்த்தனைகளும்… எம்மில் ஆழமாகப் பதிந்து கிடந்த இறையன்பின் வெளிப்பாடுகளாக … நாம் இறையுணர்வில் திளைத்து நின்றோம்.
ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வந்தபோது மௌனம் அனைவரிடத்தும் குடிகொண்டு நீண்டதொரு இடைவழியை ஏற்படுத்தியிருந்தது. உலகப் பிரசித்திபெற்ற மூன்றாம் பிரகாரம் கண்டதும் எம் மௌனம் கலைந்தது. அதன் கலை நயத்தில் மயங்கி நின்றோம்.
ஆலயதரிசனம் முடிந்ததும் தங்கியிருந்த இடத்துக்கு நடந்து சென்றபோது மீண்டும் உடல் சோர்வை அனுபவித்தேன். தொடர்ந்து வாந்தி எடுத்தபோது என்னால் அன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள இயலாது என்பதைப் புரிந்து கொண்டேன்.
விடுதியை அடைந்ததும் அனைவரும் காலை உணவை உண்ண விரைந்தனர். நானோ எழுந்திருக்க இயலாது படுக்கையில் சுருண்டேன். இப்போது மேலதிகமாக இருமலும் ஏற்பட்டிருந்தது.
காலை உணவின் பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவரும் அன்றைய விசேட நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கலை , கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றனர்.
நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை எனது உடல்நிலை குறித்து சிரத்தை கொண்டிருந்த சகோதரிகள் துளசி, நிஷேவிதா மற்றும் பிரணீதா என்னைப் பார்க்கவென்று அறைக்கு வந்தனர். அவ்வேளை நான் வாந்தியெடுக்க ஓங்காளமிடும்போது நிஷேவிதா எனது வாந்தியை பிளாஸ்ரிக் வாளியில் ஏந்தியது மனதை நெகிழச் செய்த ஒரு அனுபவம்.
எங்கிருந்தோ வந்து, எதிர்பாராமல் சந்தித்து , இன்பமுடன் பழகி , ஒருவர் துன்பத்தை மற்றவர் சுமப்பதென்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்??? மனிதம் இத்தகைய அன்புள்ளங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
எனது உடல் நிலை குறித்து அதிருப்தி அடைந்த அவர்கள் எனது நிலையை இணைப்பாளர்களுக்குத் தெரியப்படுத்த அவர்கள் என்னை மருத்துவ சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றனர். அங்கு நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பெற்றேன்.
இந்த இடத்தில் என்னோடு கூடவே வந்து கவனித்துக் கொண்ட மலேசிய சகோதரி பிரதீபா பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியே ஆகவேண்டும்.
சந்தித்து ஓரிரு நாள் பழக்கத்தில் ஒருவர் மற்றொருவருக்கு இவ்வாறெல்லாம் உதவ முடியுமா ? என வியக்கும் அளவுக்கு தனது பாசத்தையும் நேசத்தையும் தந்து ஒரு தாதிபோன்று என்னைக் கவனித்த அந்த சகோதரியை …. அவரது கரிசனையை …நேசிக்கும் உள்ளத்தை ….இக்கணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
……………………..
*** இராமேஸ்வரத்தில் நான் மருத்துவ சிகிச்சை பெற்ற வேளையில் ‘வேர்களைத்தேடி ‘… பண்பாட்டுப் பயணத்தின் கலை , கலாசார நிகழ்வுகள் சுற்றுலாத்துறையினரின் ஆலய விடுதி மண்டபத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அவை பற்றிய பதிவுகளை இக்கட்டுரையில் ஆவணப்படுத்தவேண்டி இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பல்கலைக்கழக மாணவனும், உடன் பிறவா சகோதரனுமான கோபிஹரன் அவர்களின் அனுபவங்களை அவரிடமிருந்து பெற்று உங்களுக்குத் தருகின்றேன்.

இந்நிகழ்வுகளில் இராமேஸ்வர கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் அதிதியாகக் கலந்து சிறப்பித்தோடு தமிழ் கலாசார பாரம்பரியங்கள் குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
பகுதி நேர நாட்டுப்புறப்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் லோக சுப்பிரமணியம் தலைமையில் பாரம்பரிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் தமது மூதாதையரின் பாரம்பரிய கலைகளைக் கண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ”இராமநாதபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜ மனோகரன் , மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி , வட்டாச்சியர்கள் அப்துல் ஜபார், தமீம் ராஜா தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலக மேலாளர் இனோக்” உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளின் நிறைவில் பாம்பன் பாலம் மற்றும் மாமேதை அப்துல் கலாம் அவர்களின் நினைவில்லம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாம்பன் பாலம்
இது கடல்வழித் தொடர் வண்டிப் பாலமாகும்.பாக்கு நீரிணையில் அமைந்துள்ள இந்தப்பாலம் இந்திய பெரு நிலப்பரப்பையும் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது.
1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கடல் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக கத்தரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. ஏறத்தாள 2.3 கிலோமீற்றர் நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.
இப்பாலத்துக்கு அருகில் 1988 ஆம் ஆண்டு ஒரு சாலைப் போக்கு வரத்துப் பாலம் திறக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தற்போதுள்ள பாலத்துக்கு அருகில் ஒரு புதிய பாலத்தைக் கட்டும் பணி தொடங்கியது. 2022ஆம் ஆண்டு டிசெம்பரில் கடல் அரிப்பின் காரணமாக தொடருந்துப்பாலம் பலவீனமடைந்ததால் , பாலத்தின்மீது தொடர்வண்டிப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையின் பின்னர் நானும் , உடல் நலம் குன்றிய மற்றொரு மலேசியச் சகோதரி சைஹானாவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக மதுரையை நோக்கி காரில் அழைத்துச் செல்லப்பட்டோம்.
சகோதரி சைஹானா முதற்பார்வையிலேயே அனைவரையும் கவரும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டவர். மலேசியாவிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் கணினித்துறையில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருந்தார். அவர் தனது குடும்பத்தினர் மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம், அவரது துறையில் அவர் கொண்டுள்ள பாண்டித்தியம் மற்றும் அவரது முதிர்ச்சியான பேச்சு என்பன என்னை வியப்பில் ஆழ்த்தியது. பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே மிகவும் நெருக்கமாகிவிட்டோம்.

‘வேர்களைத்தேடி’… நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தவர்கள் பயணத்தின்போது பங்கேற்பாளர்கள் எதிர்நோக்கக்கூடிய இடர்கள் தொடர்பாகவும் சிந்தித்து ,திட்டமிட்டு, மாற்று ஒழுங்காக நோயுற்றவர்களை தனிமைப்படுத்தி அழைத்துச் செல்ல காரை ஏற்பாடு செய்திருந்தது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
மதுரையை நோக்கிச் செல்லும் வழியில் நாம் பயணித்த கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. மாமேதை அப்துல் கலாம் அவர்களின் நினைவில்லத்தைத் தரிசிக்கப்போகின்றோம். முடிந்தால் பங்குபற்றுங்கள் என கூடவே பயணித்த இணைப்பாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க காரிலிருந்து இறங்கி நினைவில்லம் காணச் சென்றோம்.
மாமேதை அப்துல் கலாம்
மாமேதை அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை வியக்க வைத்தவர். இந்தியத் திருநாட்டின் சிறந்த அறிவாளி. எளிமையாக வாழ்ந்தவர். இந்தியாவின் தேசியக் கொடியை விண்வெளியில் பறக்க வைத்த மாமனிதர். இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானியாவார். இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகவும் திகழ்ந்தார்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் திகதி இராமேஸ்வரத்தில் ஜெய்னுலாப்டின் , ஆசியம்மா தம்பதியின் 5ஆவது மகனாகப் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதில் பல்வேறு வேலைகளைச் செய்தார். எனினும் கல்வியைத் தொடர்ந்தார்.
சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.பல பல்கலைக் கழகங்களின் விண்வெளி ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இந்தியாவின் வான்வெளி அமைப்பான ‘ இஸ்ரோ’ வில் பணியாற்றினார்.’ பொக்ரான் ‘ அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தன் இலட்சியத்துக்காக திருமணம் செய்யாது இறுதிவரை வாழ்ந்தார்.
” கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே ( இலட்சிய ) கனவு” என்பதும் ”வாய்ப்புக்காக காத்திருக்காதே.உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் ” என்பதும் ” அழகைப்பற்றி கனவு காணாதீர்கள் . அது உங்கள் கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள் .அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்” என்பதும் இவரது பொன்மொழிகளில் என்மனம் ஏற்றுக்கொண்டு செயல்படுபவை. என் வாழ்க்கைப் பாங்கைத் தடம் புரளாமல் அமைத்துக்கொள்ள எனக்குக் கைகொடுத்து உதவுபவை.
எமது பெருமதிப்புக்குரிய ஒரு மகான் ஆன அப்துல் கலாம் ஐயாவின் நினைவில்லத்தைத் தரிசிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பை நழுவவிட நானோ சைஹானாவோ தயாரில்லை என்பதால் உடல் உபாதைகளுடனும் நினைவில்லத்தைப் பார்வையிட்டோம்.
கலாம் ஐயா அவர்கள் துயிலும் இல்லத்தில் அவரது தோற்றத்தைப் பிரதிபலிக்கும் மெழுகுச் சிலை எமது கண்களைக் கவர்ந்தது. அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவரது அரிதான புகைப்படங்கள் , மற்றும் ஆவணங்கள் , அவர் பயன்படுத்திய ஆடைகள் போன்றவற்றைப் பார்வையிட்டு முடிந்ததும் அவரது சமாதியைக் காணும் பேறு கிட்டியது.
உலகத்துக்கு நல்ல பல கருத்துக்களை விட்டுச் சென்ற மாமேதையின் சமாதி முன் நின்றபோது உடல் சிலிர்த்தது. கண்கள் கண்ணீரைச் சிந்தின. வறுமையில் வாழ்ந்தபோதும் வாடிச்சோராது வாழ்வின் சவால்களை வெற்றிகொண்டு வரலாற்றில் தன் தடம் பதித்த அந்த மாமேதையின் நினைவுகளை மீட்டிய கனத்த இதயத்தோடு காரில் ஏறி மதுரைக்கான பயணத்தைத் தொடர்ந்தோம்.
மதுரையில் மீனாட்சி அம்மன் ஆலயத்தைத் தரிசித்து மகிழ்ந்த இனிய அனுபவங்களை எனது அடுத்த பதிவில் தர உள்ளேன். அதுவரை காத்திருப்போமா ?