கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட எமது ‘வேர்களைத்தேடி’ … பண்பாட்டுப்பயணம் திருநெல்வேலியை அடைந்தபோது இரவு நேரம் ஒன்பது மணியாகியிருந்தது.
திருநெல்வேலியிலுள்ள ‘அப்பிள் ட்ரீ ‘ ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தே ஹோட்டலின் வெளிப்புற அழகு மலைப்பினை ஏற்படுத்தியது. வெளிப்புற அழகு கண்ணைக் கவர்ந்ததென்றால் அதன் உட்புற அழகும் நேர்த்தியும் மனதைக் கவர்ந்தன.
இணைப்பாளர்களினால் ஒதுக்கித் தரப்பட்ட சொகுசு அறைகளை தற்காலிக உடைமைகளாக்கி நாம் ஓய்வெடுத்தோம். காலையில் இக் ஹோட்டலை விட்டு புறப்பட்டு ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய கணமே இன்னும் சில நாட்கள் இங்கு தங்கிச் செல்ல முடியாதா என்ற ஏக்கமும் பிறந்தது.
இரவு உணவின் பின்னர் மறுநாள் பார்வையிடவுள்ள இடங்கள் தொடர்பாக எமது கைப்பேசிக்கு ‘ வாட்ஸ் அப் ‘ மூலம் குறுஞ்செய்தியொன்று வந்திருந்தது.
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயத்தையும் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நினைவில்லத்தையும் தரிசிக்க இருக்கின்றோம் என்ற தகவலை அது வெளிப்படுத்தியது.
இரு இடங்கள் தொடர்பாகவும் தேடியறியும் வேட்கையோடு இணைய வழித் தேடலைத் தொடங்கினேன்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் ஆலயம்
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலியில் சுயம்புவாகத்தோன்றிய இலிங்கத்திற்கென அமைக்கப்பட்ட ஆலயமே நெல்லையப்பர் ஆலயமாகும்.
இது திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் தெற்கு வடக்காக 756 அடி நீளமும் மேற்கு கிழக்காக 378அடி அகலமும் கொண்டு சிற்பக்கலையின் சிகரமாக விளங்குகிறது.
சுயம்புவான சிவலிங்கம், கல்லாலான இசைத்தூண்கள், மரத்தாலான சிற்பங்கள் ஆகியவை இதன் சிறப்பங்சங்களாகும். இத்திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
இங்குள்ள தேர் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. இத்தேர் 1505 ஆம் வருடம் உருவாக்கப்பட்து. தமிழ்நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய தேர் இதுவாகும். உலகிலேயே அதிக எடைகொண்ட தேரும் இதுவெனக் கூறப்படுகின்றது..
மதுரைக் கோயிலைவிட பெருங்கோயிலான இத்திருக்கோயில் 5 கோபுரங்களோடு விளங்கும் ஒரு கோயிலாகும். இங்கு 520 அடி நீளமும் 63அடி அகலமும் கொண்ட 1000 தூண்களையுடைய ஆயிரங்கால் மண்டபம் காணப்படுகிறது.
இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணிமண்டபம் என்பர். நின்ற சீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது.
( நெல்லையப்பர் ஆலயம் தொடர்பாக எனது சிறு தேடல் நிறைவு பெற்றதும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை தொடர்பாகத் தேடலைத் தொடங்கினேன்.)
வ.உசிதம்பரம் பிள்ளை (வ.உ..சி)
1872 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் இடத்தில் உலக நாத பிள்ளை , பரமாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
அவர் தனது கல்வியை சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும் அருகிலுள்ள திருநெல்வேலி பாடசாலைகளிலும் பயின்றார்.
இவரது தந்தை உலகநாதன் பிள்ளை தமிழ் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர் ஆவார். அதனால் தானும் வழக்கறிஞராகும் ஆர்வம் கொண்டிருந்தார்.
தனது பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு ஒட்டப் பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று புகழ் பெற்றார். அரசியலில் நுழையும் பொருட்டு 1905 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார்.
இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய அக் காலகட்டத்தில் தலைவர்களான லாலா லஜ்பத் ராய் , பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தகப் பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சி செய்தனர்.
அதே காரணத்திற்காகவும் , இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னையிலிருந்து போராடினார்கள். அவர்களுடன் இணைந்து போராடத் துணிந்தார்.
பின்னர் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமை தாங்கினார்.இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தவுடன் இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர் முழுமனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார்.
இதன் நிமித்தம் இலங்கைக் கடலோரங்களிலுள்ள ஆங்கிலேயக் கப்பல் போக்குவரத்தின் ஏகபோக உரிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ராமகிருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர் 1906 நவெம்பர் 12 இல் ‘ சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்ஸ்’ நிறுவனத்தை நிறுவினார்.
தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க இரண்டு நீராவிக் கப்பல்களான ‘ எஸ் .எஸ் . காலியோவையும் , எஸ் .எஸ் லாவோவையும் ‘ மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ், மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார்.
ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும் இவரது கப்பல்கள் தூத்துக்குடி – கொழும்பு இடையே சேவையைத் தொடங்கின.
வ.உ.சி யின் கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல் , பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியரால் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது.
இது பிரித்தானிய கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. இதனால் பிரித்தானிய கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக வ.உ.சி.யும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
இறுதியில் பிரித்தானிய கம்பெனி இலவச சேவையை வழங்க முன்வந்தது. வ.உ.சி.யால் அவ்வாறு முடியவில்லை.இதனால் அவரது கம்பெனி நட்டத்தில் விழுந்தது.
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும் ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்குடன் இருந்தார்.
திருநெல்வேலியிலுள்ள ‘ கோரல் மில்ஸ் ‘தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர்மீது கொண்ட வெறுப்பினால் இச்செயலை அரச விரோதம் எனக் குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டனர் .இதனால் நாட்டில் வன்முறை வெடித்தது.
1908 மார்ச் 12 ஆந்திகதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908 ஜூலை 09 ஆம் திகதி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் அரசியல் கைதியாக அல்லாது சாதாரண கைதி போன்றே நடத்தப்பட்டார். இதனால் உடல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.
1911இல் பொருளாதார நெருக்கடிகளால் அவரது கப்பல் கம்பனி கலைந்தது. இவ்வேளை வ.உ.சி. சிறையில் இருந்ததால் அவரின் கைகள் முடக்கப்பட்டிருந்தன.
1912 டிசெம்பர் 12ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்ததால் அவரது வழக்கறிஞர் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. வக்கீலாகத் தொழில் புரிய இயலவில்லை. இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடியது.
1920 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் பங்கு கொண்டார். தொடர்ந்தும் விடுதலைக்குப் போராடினார். 1936 ஆம் ஆண்டு நவெம்பர் 18 ஆம் திகதி தேச விடுதலை காணும் முன்னரே மரணத்தைத் தழுவினார்.
( வ.உ.சி.யைப் பற்றிய சிறு தேடல் நிறைவடைந்ததும் தூக்கம் என் கண்களைத் தழுவிக் கொண்டது.)
………………….
02 01 2025 அன்று காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போதே இன்றைய நாள் விசேடமான ஒரு நாள் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் இன்று ஆதவன் அண்ணாவின் பிறந்த நாள் என்ற நினைவு தோன்றியது.
ஆதவன் அண்ணா என்னுடன் பணிபுரியும் ஒருவர். என்னைத் தன் உடன்பிறப்பாகக் கருதி அன்பு பாராட்டும் ஒருவர். மென்மையானவர். மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். மனித நேயம் கொண்ட பண்பாளர் என்ற வகையில் அவரைப் பற்றிய சிறு பதிவொன்றை இங்கு வெளிப்படுத்த விளைகின்றேன்.

நான் தற்போது பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியில் இணைந்த புதிதில் எனது அலுவலக மேசையில் சிறு மீன் தொட்டி ஒன்றினை வைத்து மீன்கள் சிலவற்றை அதில் வளர்த்து வந்தேன். மீன் வளர்ப்பில் தானாகவே முன்வந்து எனக்குக் கை கொடுத்தார் ஆதவன் அண்ணா. காலையில் உரிய வேளைக்கு முன்னரே வேலைக்கு வந்து முதல் வேலையாக மீன்களைப் பராமரிப்பது எமது வேலையாகிப் போனது.
ஒரு நாள் காலைவேளை நான் ஆசையாக வளர்த்த அந்த மீன்களில் ஒன்று இறந்து போயிருந்தது.எனக்கோ தாங்க முடியாத மன வேதனை. எனது துயரத்தைப் புரிந்து கொண்ட ஆதவன் அண்ணா மீன் தொட்டியைச் சுத்தம் செய்து நீர் மாற்றியதோடு நின்றுவிடாது இறந்து போன மீனை அலுவலகத்திற்கு வெளியே எடுத்துச் சென்று ஒரு மரத்தினடியில் அடக்கம் செய்ய எனக்குதவிய நிகழ்வை என்னால் சாதாரணமானதொன்றாக எண்ணிக் கடந்துவிட முடியவில்லை.
அவரது அந்த செயலால் என் மனதில் இமயம் என உயர்ந்து நின்றார். பின்னாளில் அந்த நிகழ்வே அவர்மீதான பாசப் பிணைப்பை அதிகரிக்கச் செய்தது.
…………………
ஆதவன் அண்ணாவுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த நிறைவோடு அன்றைய நாளை உற்சாகமாக வரவேற்கத் தயாரானேன்.
காலையில் அனைவரும் தயாராகி உணவுண்டு முடித்ததும் நெல்லையப்பர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றோம். கோயில் வாசலில் நாம் முற்றிலும் எதிர்பார்த்திராத ஆச்சரியம் எமக்குக் காத்திருந்தது.
ஆலய முன்றலில் சனக்கூட்டம் நிறைந்திருந்தது. நாம் பஸ்ஸை விட்டிறங்கி வெளியே வந்ததும் ஆலய வாசலில் எம்மை வரவேற்கக் காத்திருந்த அரசியல் தலைவர்களினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டோம்.
சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்திடையே எமக்கு வழங்கப்பட்ட அந்தக் கௌரவம் நெஞ்சத்தை நெகிழவைத்தது. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் அயலகத் தமிழர்களான எமக்குக் கிடைத்த வரவேற்பு எம்மை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
ஆலயத்தினுள் எமது காலடிகள் பதிந்த நேரத்திலிருந்து இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை நெல்லையப்பரைத் தரிசனம் செய்த பொழுதுகள் என் நெஞ்சத்திரையில் வண்ணப் படமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
என் வாழ்நாளில் நான் பார்த்த, பரவசமான, பிரமாண்டமான, கலைக்கோயில்கள் அத்தனையையும் வரிசைப்படுத்தும் ஒரு பணி எனக்கிடப்பட்டால் யோசிக்க வேண்டிய தேவையே இன்றி நெல்லையப்பர் ஆலயத்தைத்தான் முதலாவதாகத் தெரிவு செய்வேன். அந்தளவிற்கு அந்த ஆலயத்தின் தரிசனம் ஒரு நிறைவை எனக்கு வழங்கியிருந்தது.
ஆலய தரிசனம் காண நாம் உள் நுழைந்தவேளை ஆலய நிர்வாகத்தினர் எம்மை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இறை வழிபாட்டின் பின்னர் ஆலயத்தின் உள்ளே ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்து அவற்றின் சிறப்புக்கள் குறித்து விளக்கமளித்தபோது அதன் தொன்மை மற்றும் சிறப்புக்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
ஆலயத்தைச் சுற்றி வரும்போது ஓரிடத்தில் நின்று எமது கால்கள் அசைய மறுத்தன. இசைத்தூண்கள் எழுப்பிய நாதம் கேட்டு பரவசமானோம்.
ஒரே கல்லில் சுற்றிச்சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன.ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டு வரும்.மொத்தம் 48 சிறிய தூண்கள் இவ்வாறு உள்ளன.
(தமிழ்நாட்டில் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.)
ஆலயத்தின் மண்டபத்தில் ஓதுவார் ஒருவர் தேவாரப் பாடல்களை உள்ளம் உருகிப் பாடிக்கொண்டிருந்தார்.அவரோடு இணைந்து நாமும் சிறிது நேரம் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.
இந்த இடத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த பங்கேற்பாளர் ஆஸ்ச் (Ash) உள்ளம் உருகி தேவாரப் பாடல்களைப் பாடியது மனதை நெகிழ வைத்தது. தமிழைப் பேசுவதற்கு சிரமப்படும் ஒருவர் தமிழ்மொழியில் தேவாரங்களைப் பாடி அசத்தியது எமக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஆலயத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும் அழகிய சிற்பங்களால் உயிர் பெற்றிருந்தன. அச்சிற்பங்களில் வேறெங்கும் கண்டிராத தனித்துவம் காணப்பட்டது. ஏனைய ஆலயங்களில் காணக்கூடிய யாளிகளோடு ஒப்பிடுகையில் இங்கு காணப்பட்ட யாளிகள் மாறுபட்டவையாக கலைத்துவம் மிக்கவையாகத் தோன்றின.
மேலும் குரங்கொன்று தன் குட்டியை அணைத்திருக்கும் காட்சியை தூண் சிற்பமாகக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். எந்த உயிரினமாக இருந்தாலும் தாய்மை எல்லாவற்றுக்குமே பொதுவானது என்ற உண்மையை அது பறைசாற்றுவதாகவே எனக்குத் தோன்றியது. தாய்மையின் இதயத்துடிப்பை கல்லிலே கலைவண்ணமாக வடித்த கலைஞனை மனம் மகிழ்வோடு வாழ்த்தியது.
இத்தகைய சிற்பங்களை இலங்கையில் எங்குமே காண முடிவதில்லை என்ற உண்மை மனதை உறுத்தியது. இலங்கையிலிருந்து ‘வேர்களைத்தேடி ‘ … நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு ஒரு பேறாகவே தோன்றியது.
ஆலயத்தின் சிற்பங்கள் தொடர்பான விளக்கத்தினை எம்மோடு கூட வந்த சுற்றுலாத்துறை அதிகாரி திருவாளர் கணேஸ் அவர்கள் விளக்கினார். கல்லிலே வடித்த சிற்பங்களுடன் மரத்திலே செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
*** தமிழர் தம் கலைப் பாரம்பரியங்களுக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாக நெல்லையப்பர் ஆலயம் திகழ்ந்தது என்ற உண்மையை இங்கு வலியுறுத்திக்கூற விரும்புகிறேன்.
ஆலயத்தில் எமக்கு பிரசாதம் வழங்கப்பட அவற்றைச் சுவைத்ததன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.
எமது நெஞ்சங்கள் கலைக்கோயிலாக நெல்லையப்பர் ஆலயத்தை வடிவமைத்த எம் முன்னோரது ஆற்றலையும் , ஆளுமையையும் , இரசனையையும் எண்ணிப் பூரிப்பில் நிறைந்திருந்தன.
ஆலய தரிசனம் நிறைவு பெற்றதும் மதிய உணவுக்காக திருநெல்வேலி தலைப்பாக்கட்டி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
ஹோட்டலில் உணவுண்ணும்போது அருகேயிருந்து உணவுண்ட சகோதரன் மாயோன் அவர்களோடு பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. நோர்வே நாட்டிருந்து நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த மாயோன் தமிழ் பேசுவதற்கு சிரமப்பட்டபோதிலும் ஆங்கிலத்தில் பேசாது தொடர்ந்து தமிழைப்பேச எத்தனித்தது பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. எந்த நாட்டில் இருந்தாலும் தமிழை நேசிக்கும் மனிதர்கள் இருக்கும்வரை “தமிழ் இனி மெல்லச் சாகும் ” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

பிரியாணிக்கு பிரபல்யம் வாய்ந்த திண்டுக்கல் பிரியாணியை திண்டுக்கல்லிலே சுவைத்த அனுபவம் ஏற்கனவே எனக்கிருந்தது. அதன் பின்னர் திருநெல்வேலியில் பிரியாணியைச் சுவைத்தபோது திண்டுக்கல் நினைவுகளும், கூடவே உணவுண்ட பெற்றோரின் ஞாபகமும் வந்தது.
மதிய உணவின்பின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மாபெரும் பங்காற்றிய புரட்சியாளர் வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வ.உ.சி . நினைவகத்துக்குச் சென்றோம்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யைப் பற்றி கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வாயிலாக அறிந்திருந்தேன். அத்திரைப்படத்தை இல்லத்திரையில் பார்த்தபோது எனக்குள் பொங்கிப் பிரவாகித்த தமிழன் என்ற பெருமிதம் நினைவில்லத்தைத் தரிசித்தபோது மீண்டும் தோன்றியது.
திரைப்படத்தில் வ.உ.சியாகப் பாத்திரமேற்று நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என்பதை விட வ.உ.சி யாகவே வாழ்ந்திருப்பார்.
மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அசைபோடக் கிடைத்த ஒரு தருணமாக நினைவில்லத்தின் தரிசனம் எனக்கு அமைந்திருந்தது. அத்துடன் அங்கு தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்திருந்தது.
நினைவில்லத்தில் எம்மை வரவேற்ற அதிகாரிகள் வ.உ.சி குறித்த மேலதிக தகவல்களை எமக்கு வழங்கினர். ஒரு தமிழன் என்ற ரீதியில் இறுமாந்திருந்த பொழுதுகள் அவை.
(இங்கு சுதந்திரப் போராட்டத்தில் தமிழின் பங்களிப்பை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் தமிழ்நாட்டின் பெருமைமிகு பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது என்னைப் பொறுத்தவரை ஒரு பேறாகவே கருதுகிறேன்.
என் வாழ்க்கைப் பயணத்தில் இந்த நாள் ( 02.01.2025 ) மறக்க முடியாத, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் என்ற உணர்வை உரத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
திருநெல்வேலி அல்வா உண்டதைப் போன்ற இனிய உணர்வுடன் இராமேஸ்வரம் நோக்கிப் பயணமானோம். அங்கு எமது ஆன்மீகத் தேடலுக்கு கிடைத்த பரவச அனுபவங்களை எனது அடுத்த பதிவில் தர உள்ளேன். அதுவரை காத்திருப்போமா?
(எனது பயணம் தொடர்பான காணொளிகளை இறுதியில் இணைத்துள்ளேன்)