2024ஆம் ஆண்டின் இறுதிநாள்…
‘வேர்களைத்தேடி …’ பண்பாட்டுப் பயணத்தின் அடுத்த நகர்வு கன்னியாகுமரி நோக்கித் திரும்பியது.
கன்னியாகுமரியில் சூரிய உதயம் காணப்போகிறோம் என்ற தகவல் இணைப்பாளர்களினூடாக எம் செவிவழி நுழைந்தவேளை என் மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.
எனக்கு மிகவும் பிடித்தமான ‘ அவளும் நானும்…’ பாடல் காட்சியில் கன்னியாகுமரிக் கடலின் பின்னணியில் சூரியன் உதயமாகும் அற்புதக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அக் காட்சியை இரசிக்கும் போதெல்லாம் மனதில் ஏற்படும் சிலிர்ப்பை நேரில் அனுபவிக்கப் போகிறேன் என்ற எண்ணம் தோன்றியதுமே. மனது பரவசத்தில் மூழ்கித் திளைத்தது.
பயணம் செய்யும் வழியில் பஸ் தேநீர் அருந்துவதற்காக ஓர் ஹோட்டலின் முன்பாக நிறுத்தப்பட்டது. பிறக்கவிருந்த புதுவருடத்தை முன்னிட்டு அந்த ஹோட்டல் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இசை காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. இசையில் மயங்கிய இளைஞர்களுக்கு ஆடலில் ஆசை பிறந்தது. அவர்களது ஆசைக்கு இணைப்பாளர்கள் தடை விதிக்காததால் ஆடி மகிழ்ந்தனர்.
மாலை 7.30 மணியளவில் கன்னியாகுமரியிலுள்ள ‘ஆர் ஆர்’ ஹோட்டலை நாம் அடைந்திருந்தோம்.பார்வைக்கு மிகவும் அழகாக அமைந்திருந்த இந்த ஹோட்டலின் வரவேற்பறையை ஒட்டிய இடமொன்றில் உள்ளக விளையாட்டு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அது எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எமது பயணப்பொதிகளை தங்குமிடங்கள் ஒவ்வொன்றிலும் பஸ்ஸிலிருந்து இறக்கி மீளவும் ஏற்றுவதில் இணைப்பாளர்களும் மற்றும் இரு சாரதிகளும் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தனர் என்ற உண்மையை நான் இங்கு பதிவு செய்து ஆகவேண்டும்.
பங்கேற்பாளர்கள் 38பேர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு பயணப் பொதிகள். இவற்றுக்கு மேலதிகமாக எம்மோடு பயணத்தில் இணைந்திருந்த உத்தியோகத்தர்களின் உடமைகள். இவற்றை ஒவ்வொரு நாளும் இறக்கி ஏற்றுவதென்பது சற்று சிரமமான பணிதான். ஆனாலும் அவர்கள் அதனை மனவிருப்பத்தோடு நிறைவேற்றியது பாராட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
இந்த சிலநாட் பயணத்தில் பங்கேற்பாளர்கள் சிலரது பயணப்பொதிகள் ஒன்றோடு ஒன்று மோதுண்டு பொலிவை இழந்திருந்தன. ஒன்றிரண்டு உடைந்தும் போயிருந்தன.
இவ்விடத்தில் எனது அனுபவம் ஒன்றினை இங்கு வெளிப்படுத்த விளைகிறேன். பொதுவாகவே எனது குடும்பத்தினர் பயணத்தில் நாட்டமுடையவர்கள். அதனால் இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் பலவற்றைத் தரிசித்த அனுபவம் எனக்குண்டு. இலங்கையிலுள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் சிலவற்றில் தங்கியிருந்த அனுபவமும் எனக்குண்டு.
உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்களில் நாம் சந்தித்த மேலை நாட்டவர்களின் பயணப்பொதிகள் துணியினால் அமைந்தவையாக இருப்பதை பலதடவைகள் அவதானித்திருக்கிறேன். அதேபோன்று விமானப் பயணங்களின்போது விமான நிலையத்தில் சந்தித்த மேலைநாட்டவர்களின் பயணப்பொதிகளும் துணியில் அமைந்திருந்ததை அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவர்கள் எல்லோரும் ஏன் துணிப்பையைச் சுமந்து திரிகிறார்கள்? என்ற வினா எனக்குள் எழுந்ததுண்டு.
இப்போது எனது வினாவுக்கான பதில் அனுபவம் மூலம் கிடைத்ததைப் புரிந்து கொண்டேன். துணிப்பையைச் சுமப்பது சுலபம், அதிகமான உடைகளைப் பைகளில் திணிக்கலாம். பை உடைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. பாரமும் குறைவு. இதனால் தான் மேலைத்தேசத்தவர் துணியினாலான பயணப்பொதிகளை எடுத்துச் செல்கின்றனர் என்ற உண்மையை உணர்ந்து தெளிவடைந்தேன்.
‘ஆர் ஆர் ‘ ஹோட்டலில் இணைப்பாளர்கள் எமக்கான அறைகளை ஒதுக்கித்தரும்போது பின்னிரவில் ஹோட்டலில் புதுவருட ‘பார்ட்டி’ இடம்பெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். புதுவருடத்தை வரவேற்கும் உற்சாக மனநிலையோடு அறைகளுக்குள் புகுந்து கொண்டோம்.
குளித்து, உடைமாற்றி, இரவுணவை உட்கொண்டு முடித்ததும் கீழ்த்தளத்தில் பார்த்த உள்ளக விளையாட்டு உபகரணங்களின் நினைவு எழுந்தது.. கூடவே எமது இல்லத்தில் நானும் எனது சின்ன அண்ணா ஜனகனும் ‘கரம்’ விளையாடி மகிழ்ந்த பொழுதுகள் நினைவுக்கு வந்தன. இரு வருடங்களுக்கு முன்பு சின்ன அண்ணா தனது துணைவியோடு அவுஸ்திரேலியா சென்றதும் ‘கரம்போட் ‘ ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது.
அண்ணாவின் இனிய நினைவுகளை அசைபோட்டவளாக உள்ளக விளையாட்டு இடத்திற்கு நகர்ந்தேன். அங்கே பங்கேற்பாளர்கள் சிலர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களோடு நானும் இணைந்து கொண்டேன்.
கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சகோதரன் சஞ்சீவனோடு இணைந்து ‘கரம் ‘ விளையாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அத்தோடு பேசிப் பழகுவதற்கான சந்தர்ப்பமும் அமைந்தது. அவர் தோற்றத்தில் எனது சின்ன அண்ணாவின் சாயலைக் கொண்டிருந்தது மனதுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விளையாடி முடிந்ததும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டோம். பங்கேற்பாளர்கள் எல்லோருமே பாடலுக்கேற்ப ஆடி மகிழ்ந்திருந்த பொழுதுகள் வாழ்வில் என்றுமே பசுமையானவை.
அதிகாலை 4 மணிக்கு சூரியோதயம் காண கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்பதை இணைப்பாளர்கள் நினைவூட்டியதைத் தொடர்ந்து உறங்குவதற்குச் சென்றோம். ஆனாலும் நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக விழித்திருந்தேன். என்னோடு அறையில் தோழி கேசினியும் இணைந்திருந்தார்.
வருடம் பிறந்ததும் கேசினியும் நானும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டோம். தோழி படுக்கைக்குச் செல்ல விடைபெற எனது குடும்பத்தவருடன் வாழ்த்துக்களைப் பரிமாறிவிட்டு உறங்கச் சென்றேன்.
அதிகாலை 4 மணிக்கு சூரியோதயம் காண இணைப்பாளர்களுடன் நாம் புறப்பட்டுச் சென்றவேளை பங்கேற்பாளர்களில் பலர் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. நள்ளிரவில் ஆடிக்களைத்த களைப்பினால் அயர்ந்து தூங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஹோட்டலிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு, சிறிது தூரத்தை நடந்து கடந்து சூரிய உதயம் காண்பதற்கென்று கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கோபுரத்துக்கு நாம் வருகை தந்திருந்தவேளை சூழ்ந்திருந்த இருள் முற்றாக விலகவில்லை. ஆனாலும் கடற்கரையில் சனக்கூட்டம் நிறைந்திருந்தது. அனைவரது கண்களும் சூரிய உதயத்தைக் காணும் அவாவில் வானத்தை நோக்கி அகன்று விரிந்திருந்தன.
அருணனுக்கு எம்மோடு என்ன கோபமோ ? மேகத்துள் ஒழிந்து எம்மை ஏமாற்றியே விட்டான். புது வருடத்தில் நாம் சந்தித்த முதல் ஏமாற்றம் அது. ஆனாலும் கன்னியா குமரிக் கடல் எம்மை ஏமாற்றவில்லை. தனது வனப்பெல்லாம் ஒன்று திரட்டி அலை வடிவில் ஜாலம் காட்டியது.
காட்சிக் கோபுரத்திலிருந்து தூரத்தேயிருந்த விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுர் சிலையைப் பார்க்க முடிந்தது. புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடிப் பாலம் பார்வைக்கு விருந்தளித்தது.
சற்று நேரத்துக்கெல்லாம் ஹோட்டலில் உறக்கத்திலிருந்த நண்பர்கள் சூரியோதயம் காண அவசர அவசரமாக வந்து சேர்ந்தனர். எனினும் எம்மோடு சேர்ந்து அவர்களும் ஏமாற்றத்தைச் சுமந்தது மறக்க முடியாத தருணங்கள்…
ஹோட்டலுக்குத் திரும்பி அடுத்த நிகழ்வுக்குத் தயாரானோம். பயணத்தின் ஒரு பகுதியாக ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் திருவாளர் எஸ் .எம் .நாஸர் அவர்களும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திருமதி அழகு மீனா அவர்களும் கும்மிபூண்டி எம். எல்.ஏ. திரு . டி.ஜே .கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்களுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஊக்கமும் உற்சாகமும் வழங்கினார். அதிதிகள் பங்கேற்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன். அமைச்சர் அவர்கள் பணப்பரிசும் வழங்கினார்.
பதவி வரும்போது பணிவும் எளிமையும் தொலைந்துபோய்விடும் என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் நிகழ்வுக்கு அதிதிகளாக வந்தவர்களோ மிகவும் சாதாரணமானவர்கள் போன்று எம்மோடு தோழமையுடன் பழகியது ஒரே சமயத்தில் ஆச்சரியத்தையும் மனமகிழ்ச்சியையும் அளித்தது.
நிகழ்வுகள் முடிவடைந்ததும் மிகப் பிரபலமான புனித அன்னை மரியா தேவாலயத்தைப் பார்வையிட நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். ஆலயத்தின் பெருமை மற்றும் சிறப்புகள் குறித்து ஆலய நிர்வாகத்தினர் பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தனர். புதுவருட நாளில் புனித ஸ்தலம் ஒன்றினைத் தரிசித்த நிறைவு எமக்கு ஏற்பட்டது. அந்த ஆலயத்தின் கட்டிடக்கலை எம்மைப் பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அன்னை மரியா ஆலயத்தின் பின்புறமாக சிறிய தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் புராதனமான அந்த ஆலயத்துக்கு இயேசு நாதரின் சீடர் தோமையார் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இங்கு நேர்த்தி செய்வது நிறைவேறும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே காணப்படுவதாகவும் அறிய முடிந்தது. தேவாலயத்தின் பின்புறமாக அமைந்துள்ள மாடியில் நின்று பார்த்தபோது கன்னியாகுமரியின் முழு அழகினையும் கண்டு களிக்கக் கூடியதாக இருந்தது.
ஆலயத்தினை பார்வையிட்டு முடிந்ததும் மதிய உணவுக்காக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
ஹோட்டலின் மேல்தளத்தில் பலவித உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன. விரும்பிய உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்தபோது விருந்துண்டு மகிழ்ந்த அனுபவம் எமக்குக் கிடைத்தது.
மதிய உணவுக்குப் பின்னர் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவில்லம் , திருவள்ளுவர் சிலை, மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடிப் பாலம் ஆகியவற்றைப் பார்வையிடும் ஒழுங்குகள் திட்டமிடப்பட்டிருந்தன. இருந்த போதிலும் அப்பகுதியில் அன்று கடலலை சற்று அதிகமாக இருந்ததால் எமது பாதுகாப்புக் கருதி அப்பயணம் தடை செய்யப்பட்டு மாற்று ஒழுங்காக மாத்தூர் தொட்டிப் பாலத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டோம்.
மாத்தூர் தொட்டிப் பாலத்தை அண்மிக்க நாம் கன்னியாகுமரியிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. செல்லும் வழியில் சாலையோரம் தென்பட்ட கால்வாயில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த காட்சி இலங்கையின் புராதன நகரமான பொலன்நறுவயில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது..
சாலையின் இருபுறமும் அன்னாசி விற்பனை இடம் பெற்றதைக் காண முடிந்தது. வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் அன்னாசி வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தனர். அதனைக் கண்டு எமது நாவிலும் உமிழ்நீர் சுரந்தது.
தொட்டிப் பாலத்தை அண்மித்ததும் பஸ்ஸிலிருந்து இறங்கி முதல் வேலையாக நாம் அன்னாசி வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தோம்.உண்மையில் அப்பழம் மிகுந்த சுவையுடையதாய் அமைந்திருந்தது என்ற உண்மையை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும்.
பாலத்தில் இறங்கி நடந்தபோது மீண்டும் இலங்கையின் ஞாபகம் வந்தது. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ‘எல்ல‘ என்னும் இடத்தில் அமைக்கப் பட்ட 9 வளைவுப் பாலம் தற்போது அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடமாக மாறியுள்ளது.
9 வளைவுகள் கொண்ட தூண்கள் தாங்கி நிற்கும் அப்பாலத்தை சமீபத்தில் பார்வையிட்டபோது பெற்ற அனுபவத்தை தொட்டிப் பாலத்தினூடாக நடந்து செல்கையில் உணரத் தலைப்பட்டேன். தொட்டிப் பாலத்தினளவு உயரமானதாக இலங்கையிலுள்ள பாலத்தின் தூண்கள் இல்லை எனினும். அப்பாலம் பார்வைக்கு விருந்தாய் அமைந்தது என்பது நிஜம்.
பாலத்தின் குறுகலான நடைபாதையில் நடந்தபோது தமிழகத்தின் தொழினுட்பத்திறனை எண்ணி வியப்படைந்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் பாலத்தில் நடந்து சென்றனர். புகைப்படப் பிடிப்பாளர்கள் இருவரும் ஓடி ஓடித் திரிந்து எம்மைப் புகைப்படம் எடுத்தனர்.
இவ்விடத்தில் கன்னியாகுமரிபற்றிய சிறு குறிப்பொன்றைத் தருவது வாசகர்களுக்கு மேலதிக விளக்கத்தை அளிக்கும் .என நம்புகிறேன்.
கன்னியாகுமரி
பரந்து விரிந்த இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடி முனையில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் , இந்தியக் கடலோடு சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் எனப்படும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள மிகச்சிறிய ஒரு மாவட்டமாகும்.பரப்பளவில மிகச்சிறிய மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடர்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது.
குமரி முனையில் நிலப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவில் கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு பாறையில் திருக்குறளைத் தந்த பொய்யாமொழிப்புலவன் திருவள்ளுவருக்கு வானுயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதனை அண்மித்ததாக பாறையொன்றில் சுவாமி விவேகானந்தர் நினைவில்லம் அமைக்கப்பட்டுள்ளது.


கடலுக்குள் திருவள்ளுவர் சிலையை நிறுவும்பணி 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆந் திகதி அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.38அடி உயர பீடத்தின்மீது 7ஆயிரம் தொன் எடையில் 95அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.இதனை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாந்திகதியன்று திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் பாறைப் பகுதியில் கடும் கடல் சீற்றம் , கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை அடிக்கடி நிகழ்வதால் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் பாறைக்குச் செல்லமுடியாமல் ஏமாற்றமடையும் நிலை காணப்பட்டது.விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே சென்றுவரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இணைப்புப்பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சுற்றுலாப் பயணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கைக்கமைவாக தமிழக அரசினால் 37கோடி ரூபா செலவில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே நவீன தொழினுட்பத்தில் கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது. பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் இப்பாலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 30.12.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
77மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புதுமையான பாலம் கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் உள்ளது.நடைபாதையின் மொத்த அகலமான 10 மீட்டரில் நடுப்பகுதியில் மட்டும் 2.5 மீட்டர் அகலத்துக்கு முழுக்க முழுக்க வலுவான கண்ணாடியால் பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதில் பயமின்றி நடந்து செல்லமுடியும். கடல் அலைகளையும் இரசிக்கமுடியும்.
( துர் அதிர்ஸ்டவசமாக இப்பாலத்தினூடாகச் சென்று இவ்விரு கலைப் பொக்கிஷங்களையும் தரிசிக்கும்பேறு எமக்கு வாய்க்கவில்லை. தூரத்திலிருந்தே இவ்வழகினை இரசித்தோம்.)
மாத்தூர் தொட்டிப் பாலம்
சிற்றாறு அணையில் இருந்து வேளாண்மைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்காக மாத்தூர் என்ற இடத்தில் கணியான் பாறை , கூட்டு வாயுப்பாறை என்ற இரு மலைகளுக்கிடையே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப்பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்ற பெருமையைப் பெற்றது.
1204 அடி நீளம்கொண்ட இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் 7அடி உயரத்தில் தொட்டி வடிவிலான கால்வாயும் அதையொட்டி நடந்து செல்வதற்காக சீமெந்து பலகையுடன் கூடிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான 28 இராட்சத தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள சில தூண்களின் உயரம் 115 அடி ஆகும். ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடி.
பாலத்தின் மீது நடந்து சென்றவாறு கீழே சலசலத்தோடும் ஆறு, வானுயர்ந்த மரங்கள், சூழ்ந்திருக்கும் பசுமைபோர்த்திய மலைகள் என கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 1966இல் இப்பாலம் கட்டப்பட்டது.58 ஆண்டுகள் கடந்தும் நல்ல நிலையிலுள்ள இப்பாலம் அந்த மாமனிதனின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

*** கன்னியாகுமரி உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு தலமாகும். எமது பயணத்திட்டத்தில் இங்குள்ள குறிப்பிட்ட சில இடங்களே உள்ளடக்கப்பட்டிருந்ததால் ஏனைய இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எம்மில் சிலருக்கு இருந்தது. அது தமிழகத்திற்கு மீண்டும் வருகைதர வேண்டும் என்ற ஆசையையும் தோற்றுவித்திருந்தது.எமது ஆசைகள் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு திருநெல்வேலி நோக்கிப் பயணமானோம்.
திருநெல்வேலியில் திராவிடக் கட்டடக் கலையின் அற்புதமாக விளங்கும் நெல்லையப்பர் ஆலயத்தைத் தரிசித்து பக்திப் பரவசத்தில் உளம் உருகிய தருணங்களையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.நினைவகத்துக்குச் சென்று நெகிழ்ந்த தருணங்களையும் அடுத்துவரும் பதிவில் தருவதற்கு உள்ளேன். அதுவரை காத்திருப்போமா ?
(எனது பயணம் தொடர்பான காணொளிகளை இறுதியில் இணைத்துள்ளேன்.)